இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய XI மோதும் பயிற்சி ஆட்டம் நவம்பர் 28ம் தேதி தொடங்கியது. முதல் நாள் மழையினால் தடைபட்டது. இரண்டாவது நாளின் முடிவில் இந்திய அணி 358 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியXI 24-0 என நேற்றைய நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
மூன்றாம் நாளன இன்று ஆஸ்திரேலிய XI அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வழுவான நிலையில் தங்களது ஆட்டத்திறனை வெளிபடுத்தினர். டார்ஸி ஷார்ட் மற்றும் மேக்ஸ் பிரயட் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசித் தள்ளினர்.
அஸ்வின் வீசிய 14வது ஓவரில் மேக்ஸ் பிரயட் அடித்த பந்தை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த பிரித்வி ஷா கேட்ச் பிடிக்க முயற்சி செய்யும்போது கணுக்காலில் உள்காயம் ஏற்பட்டு சிக்ஸ் லைனில் சென்று விழுந்தார். வலியின் காரணமாக அவரால் நடக்க முடியாமல் இந்திய உடற்பயிற்சி நிபுணர்கள் வந்து தூக்கி சென்றனர். பின்னர் அவர் ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்பொழுது வந்த தகவலின்படி பிரித்வி ஷா அடிலெய்டில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது . பயிற்சி ஆட்டத்தில் பிரித்வி ஷா 66 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
பிரித்வி ஷா தவறவிட்ட கேட்ச்சினால் அது சிக்ஸ் லைனில் சென்றுவிழுந்தது. அத்துடன் மேக்ஸ் பிரயட்-இன் அரைசதமும் வந்தது. அவருடன் மறுமுனையில் களமிறங்கிய டார்ஸி ஷார்ட் 17வது ஓவரில் தனது அரை சதத்தை அடித்தார். பின்னர் அஸ்வின் வீசிய 18வது ஓவரில் மேக்ஸ் பிரயட் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 62 ரன்களை விளாசினார்.
அதன்பின் டார்ஸி ஷார்ட் சற்று பொறுமையுடன் விளையாடி சில பவுண்டரிகளை விளாசி வந்தார். 33வது ஓவரில் ஷமி வீசிய பந்தை எதிர்கொண்ட டார்ஸி ஷார்ட் விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆகி தனது சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். இவர் மொத்தமாக 11 பவுண்டரிகளுடன் 73 ரன்களை அடித்தார். மொத்தமாக இவர்கள் இருவரது பார்ட்னர் ஷிப்பில் 114 ரன்கள் ஆஸ்திரேலியா XI அணிக்கு வந்தது.
பின்னர் களமிறங்கிய "ஜாக் கார்டர் " மற்றும் கேப்டன் "வைட் மேன்" இருவரும் பொறுமையாக விளையாடி வந்தனர். ஆனால் உமேஷ் யாதவ் வீசிய 53 வது ஓவரில் "வைட்மேன்" ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களை விளாசினார். பின்னர் களமிறங்கிய" பாரம் உப்பால் " 5 ரன்களை மட்டுமே அடித்து அஸ்வினிடம் ரன் அவுட் ஆனார்.
ஜக் கார்டர் அரைசதத்தை விளாசும் நோக்கில் மிகவும் பொறுமையாக விளையாடிக்கொண்டிருந்தார். ஆனால் ஷமி வீசிய 61வது ஓவரில் ஜக் கார்டர் போல்ட் ஆனார். அவர் மொத்தமாக 139 பந்துகளை எதிர்கொண்டு 39 ரன்களை அடித்தார். இதில் 2 பவுண்டரிகளும் அடங்கும். அதன்பின் களமிறங்கிய "ஜோநாதன் மெர்லோ" 3 ரன்களை மட்டுமே அடித்து ஷமி வீசிய பந்தில் ரிஷப் ஃபன்ட்-டிடம் கேட்ச் ஆனார்.
ஒரு கட்டத்தில் தொடர் விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வந்த ஆஸ்திரேலிய அணியில் களமிறங்கிய ஆரோன் ஹார்டி மற்றும் ஹாரி நில்சன் இருவரும் நிலைத்து நின்று ஆட்டத்தை கணித்து விளையாட தொடங்கினர். தேநீர் இடைவேளைக்குப் பிறகு விக்கெட் எதுவும் விழவில்லை. 3ஆம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை எடுத்து இந்தியாவை விட 2 மட்டும் ரன்கள் பின் தங்கியுள்ளது .
ஆரோன் ஹார்டி அதிரடியாக விளையாடி 8 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 69 ரன்களுடனும், ஹாரி நில்சன் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.