இந்திய அணியை பொறுத்தவரையில் வரையறுக்கப்பட்ட ஓவர்களை கொண்ட டி20 மட்டும் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங்கில் பலமாக விளங்குவது டாப் ஆர்டர் தான். அதுவும் அந்த மூன்று நபர்கள் தான். ஷிகர் தவான், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரை நம்பியே இந்திய அணியின் பேட்டிங் உள்ளது. இவர்கள் மூவரும் தங்களது பணியை சிறப்பாக செய்து பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெற வைத்துள்ளனர். இருந்தாலும் இவர்கள் சொதப்பும் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக தோல்வியை தழுவும். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் அணைத்து போட்டிகளிலும் கலக்கி வந்த இந்திய அணியானது அரையிறுதியில் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணமே டாப் ஆர்டர் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே. இப்படி டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை மலை போல நம்பியுள்ள இந்திய அணியில் சமீப காலமாக ஷிகர் தவான் சொதப்பி வருகிறார். அதே சமயத்தில் வளர்ந்து வரும் வீரரான மயங்க் அகர்வாலும் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் பயன் படுத்தி ஜொலித்து வருகிறார். எனவே ஏன் ஷிகர் தவனுக்கு பதிலாக மயங்க் அகர்வாலுக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளிக்க கூடாது என்பதனை பற்றி விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்.
ஷிகர் தவான் ஐசிசி தொடர்களில் நாயகன் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதே போல இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன் அவசியம் என்பதாலும் அணியில் முக்கிய இடம் வகிக்கிறார் தவான். ஆனால் சமீபத்தில் இவர் முன்னர் போல விளையாடி வருவதில்லை. உலகக்கோப்பை தொடரில் நன்றாக விளையாடி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் சதத்தினை விளாசி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் . அதன் பின்னர் ஏற்பட்ட காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து விலகினார். அவருக்கு மாற்று வீரராக அணியில் ரிஷாப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
அந்த காயத்திற்கு பின்னர் இவரின் பார்ம் முன்பு போல இல்லை என ரசிகர்கள் அனைவரும் கூறி வந்தனர். இதனை இவர் நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்றார். அதில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் மொத்தமே 27 ரன்கள் தான் குவித்தார். இதில் இரண்டு முறை ஒற்றை இழக்க ரன்களிலேயே வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளில் தான் இவர் பார்மில் இல்லை. ஒருநாள் போட்டிகளிலாவது மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்கும் இதே நிலைமையே தொடர்ந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட அந்த ஒருநாள் தொடரில் அவர் குவித்த ரன்கள் 2 மற்றும் 36. இதிலிருந்து இனி இந்திய அணியின் துவக்க வீரராக கே.எல் ராகுலை ஏன் களமிறக்க கூடாது என ஒருபுறம் இருந்து கருத்து வந்தாலும் மறுமுனையில் பெரும்பாலானோர் மயங்க் அகர்வாலுக்கு ஏன் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பளிக்க கூடாது என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.