கிரிக்கெட் என்பது பிரபலமான ஒரு விளையாட்டு, இது உலகின் பெரும்பாலான பகுதிகளில் விளையாடப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டானது டெஸ்ட், ஒருநாள், மற்றும் T-20 என மூன்று விதமாக விளையாடப்படுகிறது.
இதில் கிரிக்கெட்டை பார்ப்பவர்களுக்கும், ரசிப்பவர்களுக்கும் மிகப் பெரிய வேறுபாடுகள் உண்டு. கிரிக்கெட்டை பார்ப்பவர்கள் சிக்ஸர் மற்றும் பௌண்டரிகள் அதிகம் செல்லும் குறுகிய நேர போட்டியான T20ஐ அதிகம் விரும்புவர். ஆனால் ரசிகர்கள் T20 போட்டிகளுடன் சேர்த்து டெஸ்ட் போட்டிகளையும் அதிக ஆர்வத்துடன் கண்டுகளிப்பர். இப்படி ஒரு சாரரை மட்டும் ஈர்க்கும் டெஸ்ட் போட்டிகளை அனைவரும் பார்க்க வைக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகிறது. அதில் ஒன்று தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர். இதை டெஸ்ட் போட்டிக்கான உலக கோப்பை எனலாம். இந்த தொடருக்காக கிரிக்கெட் விதிகளில் பல மாற்றங்களை புகுத்த MCC, ஐசிசி-க்கு பரிந்துரைத்துள்ளது. அது பற்றி இங்கு விரிவாக காண்போம்.
MCC-ன் பரிந்துரைகள்:
#1 டெஸ்ட் போட்டிகளிலும் நோ-பால் வீசினால், அடுத்த பந்தை பிரீ-ஹிட் என அறிவிக்கலாம்.
#2 டெஸ்ட் போட்டிகளில் நேர விரயத்தை குறைக்க, டைமர் கவுண்டவுன் கடைபிடிக்கப்படும். அது ஒரு ஒவர்களுக்கு இடையே 45 நொடிகள் என கணக்கிடப்படும்.
#3 அந்த டைமர்-ஐ மீறும் பட்சத்தில், அபராதம் அல்லது எதிரணிக்கு பெனால்டியாக 5 ரன்கள் வழங்கப்படலாம்.
#4 அனைத்து போட்டிகளிலும் ஒரே வகையான பந்தை பயன்படுத்த வேண்டும்.
இதன் சாதகங்கள்:
இந்த நான்கு பரிந்துரைகளை ஆராயும் பொழுது டெஸ்ட் போட்டியை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சியிலேயே உள்ளது எனலாம்.
T20 போட்டிகளை ரசிகர்கள் அதிகம் ரசிக்க காரணம் பேட்ஸ்மேன்கள் பந்தை தெறிக்கவிடுவதால் தான். இதற்க்கு சாதகமாக பிரீ-ஹிட் என அறிவித்தால் அதற்க்கு பெரும் துணையாக இருக்கும்.
அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளில் ஓவர் முறையை காட்டிலும் நேர கணக்கையே அதிகம் கடைபிடிக்கபடுகிறது. வீரர்கள் இதை பயன்படுத்தி கடைசி கட்டத்தில் தோல்வியை தவிர்க்க நிறைய நேர விரயத்தை உண்டாக்குகின்றனர். இது பல சமயம் விவாதத்துக்கு உள்ளாகிறது. காயம் ஆகிவிட்டது, தண்ணிர் வேண்டும், பேட்டை மாற்றுகிறேன் என இப்படி பல்வேறு காரணங்களை காட்டி ஏமாற்றுவர். இதை தடுக்கவே இந்த டைமர் முறையை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளது.
மேலும் ஒரே வகையான பந்தை பயன்படுத்துகையில், வெளிநாட்டு ஆடுகளம் உள்நாட்டு ஆடுகளம் என வேறுபாடு இல்லாமல் டெஸ்ட் போட்டிகள் அரங்கேறும் எனவும் நம்பப்படுகிறது.
இதன் பாதகங்கள்:
காரணம் டெஸ்ட் போட்டிகளில் ஒரு விக்கெட் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். இப்படியிருக்கையில் பிரீ-ஹிட் வாய்ப்பு தரும்பொழுது ஒருநாள் முழுக்க பந்து வீசி களைத்திருக்கும் பந்துவீச்சார்களுக்கு இது பேரதிர்ச்சியாக வாய்ப்புள்ளது.
கிரிக்கெட் என்பது இயற்கையோடு ஒன்றி விளையாடும் விளையாட்டாகும். டைமர் மற்றும் பந்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் அம்சத்தையே இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
நேரம் இயற்கையாக கடந்து செல்வது, மழை மற்றும் இன்னும் பிற சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் டைமர் முறையை பயன்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் 5 நாட்கள் டெஸ்ட் போட்டிகளில் இயந்திரம் போன்று நில்லாமல் செயல்படுவது, அவ்வளவு ஏற்புடையது அல்ல.
உதாரணமாக தற்போது நடந்த இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியை கூறலாம். இந்த போட்டியானது மூன்று நாட்களில் முடிவுக்கு வந்து விட்டது, இருந்த போதிலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர்க்கு ஒரு போட்டியில் விளையாட தடைவிதிக்கபட்டது. இது பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளானது.
அடுத்ததாக இந்தியா இங்கிலாந்து மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளில் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தவேண்டும் என்ற நிலையில், 5வது நாள் அந்த போட்டியை தொடர நடுவர்கள் உத்தரவிட்டனர்.
அதே போன்று இந்தியா இங்கிலாந்து மோதிய ஒரு நாள் போட்டியில் வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் உணவு இடைவேளை விடப்பட்டது. இப்படி நேரத்தை கடைப்பிடிப்பதில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
மேலும் முக்கியமாக பார்க்கப்படுவது, ஒரே வகையான பந்தை பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை தான். இதற்கு இந்தியா அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்," கிரிக்கெட்டை உள்நாடு மற்றும் வெளிநாடு என பிரித்து விளையாடுவதில் தான் தனி சிறப்பு உள்ளது. இதில் நாம் மாற்றம் கொண்டுவர நினைத்தால் நிலைமை அவ்வளவுதான். கிரிக்கெட்டை சீதோஷ்ணநிலைக்கு ஏற்றவாறு விளையாடுவதில் தான் வீரர்களின் திறமை அடங்கியுள்ளது. மேலும் எல்லா நாடுகளிலும் ஒரு மாதிரியான சீதோஷ்ணநிலைகள் கிடையாது. ஆசிய கண்டங்கள் சூழலுக்கும், தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஸ்விங்கிற்கும், ஆஸ்திரேலியா வேகத்திற்கும் ஒத்துழைக்க வேண்டும். இதுவே நடைமுறை இதை மாற்ற நினைப்பவர்கள் MCC கமிட்டியா அல்லது மெட்ராஸ்(M) கிரிக்கெட்(C) கமிட்டியா(C). ஆனால் இந்த பரிந்துரையை ICC ஏற்கும் பட்சத்தில், ஒரே மாதிரியான ஆடுகளம், ஒரே மாதிரியான பேட்கள் மற்றும் ஒரே அளவிலான பௌண்டரி எல்லைகள் ஏற்படுத்தவேண்டும். இது முடியாமா? இது முடியாத பட்சத்தில் அதுவும் சத்தியம் கிடையாது". இவ்வாறு அவர் தன எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதற்கு சில உதாரணங்கள்:
கூகுபுரா பந்துகள் ரீவர்ஸ் ஸ்விங்க்கு ஒத்துழைப்பதில்லை என வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். [ குறிப்பு: இந்தியா: SG, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ்: DUKES , ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் அனைத்து நாடுகள்: KOOKABURA பந்துகள் பயன்பாட்டில் உள்ளன.
ஆடுகள பயன்பாட்டில் வேற்றுமை என கூறுவதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா விளையாடிய நாக்பூர் ஆடுகளத்தை கூறலாம். இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு எடுபடும் வகையில் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்த நிலையில் தயார்செய்யப்பட்டது. ஆனால் ICC இந்த ஆடுகளத்திற்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் பச்சை நிறத்துடன் கூடிய பல ஆடுகளங்கள் போட்டிகளில் பயன்படுத்துகிறது. இது போட்டிக்கு எதிரானது இல்லையா என விமர்சனங்கள் எழத்தான் செய்கின்றது. தற்போது நியூஸிலாந்து மற்றும் பங்களாதேஷ் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பயன்படுத்திய ஆடுகளம் வெளிபுரத்திற்கும் உள்புறத்திற்கும் சிறுத்தும் வித்தியாசமின்றி பச்சை நிறத்தில் காட்சி அளித்தது. இதற்க்கு ICC எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.
இப்படி இருக்கையில் MCC-ன் பரிந்துரைகளை எப்படி ICC நடைமுறைப்படுத்தும் என பொருந்திருந்து பார்க்கலாம்.