விராத் கோலி சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ரத் கூறியுள்ளார்.
தனது காலத்தில் டெண்டுல்கர், லாரா போன்ற உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களை தனது துல்லியமான பந்துவீச்சால் நடு நடுங்க வைத்தவர் மெக்ரத். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணிலேயே முதல்முறையாக வெற்றி கொண்டது. இந்நிலையில், இந்திய அணியின் வெற்றி குறித்தும் வீராத் கோலியின் பேட்டிங் குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார் மெக்ரத்.
"கோலி விளையாடும் விதமும், அவரது ஆக்ரோஷமும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. களத்திற்குள் மட்டுமல்ல களத்திற்கு வெளியேயும் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது முக்கியமானது. அந்த வகையில், களத்திற்குள்ளும் சரி, வெளியேயும் சரி, கோலி மிகச்சிறந்த மனிதர். எனக்கு அவர் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது" என மெக்ரத் நெகிழ்ச்சியோடு கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "தற்போதைய நிலவரத்தில் கோலியே உலகின் சிறந்த பேட்ஸ்மேன். அதில் சந்தேகமே இல்லை. அவரது உத்தியும், மனோதிடமும் வியப்பளிக்கிறது. அவர் களத்தில் நிற்கும் போது இதை நீங்களே உணரலாம். எளிதான பந்து கிடைத்தால், அதை அவர் விட்டு வைப்பதில்லை. இது சிறந்த பேட்ஸ்மேனுக்கான அறிகுறி"
கோலியை பார்த்து ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஊளையிடுகிறார்களே (நக்கல் செய்யும் விதமாக) என மெக்ரத்திடம் கேட்டால், "நமது அணியை விட எதிரணி நன்றாக விளையாடும் போது சில சமயங்களில் ரசிகர்கள் இது போல் நடந்து கொள்வார்கள். மரியாதை கொடுக்கும் விதமாகவே ரசிகர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். ஆஸ்திரேலியர்கள் உங்கள் மீது கடுமையாக நடந்து கொண்டால், அது உங்கள் மீது அவர்கள் மரியாதை வைத்துள்ளார்கள் என்று அர்த்தம். உண்மையை கூற வேண்டுமென்றால், ஆஸ்திரேலிய மக்கள் கோலியின் மீது மிகப்பெரும் மரியாதையை வைத்துள்ளார்கள்" என்கிறார்.
சச்சின் டெண்டுல்கரோடு கோலியை ஒப்பீடு செய்வது பற்றி கூறும் மெக்ரத், சச்சின் ஒரு ஜாம்பவான். 200-க்கு மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளதோடு ஆயிரக்கணக்கான ரன்களை அடித்துள்ளார் சச்சின். ஆனால் கோலி இன்னும் அந்த நிலையை அடையவில்லை. விரைவில் சச்சினின் இடத்தை பிடிப்பார் என நினைகின்றேன். ஏனென்றால் டெண்டுல்கரை விட குறைந்த ஆட்டத்தில் அதிக செஞ்சுரியை அடித்துள்ளார் கோலி.
களத்தில் டெண்டுல்கர் அமைதியாகவும் மென்மையாகவும் நடந்து கொள்வார். ஆனால் கோலி அதிக தன்னம்பிகையுடனும் ஆக்ரோஷத்துடனும் விளையாடுகிறார். சச்சின் தனது ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர். சிட்னி டெஸ்டின் போது (2003-04 தொடர்) ஒரு "கவர் ட்ரைவ்" கூட அடிக்காமல் 200 ரன்களுக்கு மேல் சச்சின் அடித்தது இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது. ஸ்பெஷல் பேட்ஸ்மேன் என்றால் இது தான். விராத் கோலியின் பேட்டிங்கிலும் எந்த குறையும் இல்லை. சில சமயம் "ஆஃப் சைடுக்கு" வெளியே போகும் பந்துகளை அடிக்க முயல்கிறார். அதையும் இப்போது திருத்தி கொண்டுள்ளார். சச்சினிடமிருந்து இன்னும் அதிகமாக கோலி கற்க வேண்டும்.
நான்கு வருடங்களுக்கு முன்பு "எம்ஆர்ஃப்" பவுண்டேஷனுக்கு வந்த பும்ராவை பற்றி நினைவு கூறும் மெக்ரத், "அவரோடு சில காலம் செலவழித்துள்ளேன். அப்போதே அவர் நன்றாக யார்க்கர் போடுவார். பவுலிங் போட ஓடி வரும் போது கொஞ்சமாக குதித்து நேராக செல்லவும் என சில திருத்தங்களை அவரிடம் கூறினேன். நாட்கள் செல்ல செல்ல பும்ராவின் வேகம் குறைந்து விடும் என்று பயந்தேன். அப்படி ஏதும் நடக்கவில்லை. இன்று முன்பை விட பலமானவராகவும் தனது தனித்துவ பவுலிங் முறையால் பேட்ஸ்மேனை களங்கடிக்க கூடியவராகவும் உள்ளார்".