ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் டி-20 தொடரான ‘பிக் பாஷ் லீக்’ போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இதன் பரபரப்பான இறுதிப்போட்டியில் மேக்ஸ்வெல் தலைமையிலான ‘மெல்போர்ன் ஸ்டார்ஸ்’ அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ‘மெல்போர்ன் ரெனகேட்ஸ்’ அணியும் மெல்போர்ன் நகரில் இன்று மோதின.
இரு அணிகளுக்கும் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருந்த நிலையில், டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி கேப்டன் மேக்ஸ்வெல் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ‘மெல்போர்ன் ரெனகேட்ஸ்’ அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவில்லை. தொடக்க ஆட்டக்காரர் மார்க்கஸ் ஹாரிஸ் 12 ரன்களில் ஜாக்சன் பேர்டு பந்துவீச்சில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய சாம் ஹார்பர் 6 ரன்களில் ஜாக்சன் பேர்டு பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
‘ஸ்டார்ஸ்’ வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ‘ரெனகேட்ஸ்’ அணி திணறியது. அணி கேப்டன் ‘பின்ச்’ 13 ரன்களிலும், கேமரூன் ஒயிட் 14 ரன்களிலும் ஆட்டமிழக்க, ‘ரெனகேட்ஸ்’ அணி 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அடுத்து களம் கண்ட டாம் கூப்பரும், டேனியல் கிறிஸ்டியனும் இணைந்து சரிவை சமாளித்து ரன்கள் சேர்த்தனர். ஆரம்பத்தில் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் பின்னர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் அணியும் கௌரவமான ஸ்கோரை எட்டியது. முடிவில் ‘மெல்போர்ன் ரெனகேட்ஸ்’ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக விளையாடிய ‘டாம் கூப்பர்’ 43 ரன்களும், ‘டேனியல் கிறிஸ்டியன்’ 38 ரன்களும் விளாசினார். ‘ஸ்டார்ஸ்’ அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஜாக்சன் பேர்டு 2 விக்கட்டுக்களையும், ஆடம் ஜாம்பா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் 146 ரன்கள் எடுத்தால், தங்களது முதல் ‘பிக் பாஷ்’ கோப்பையை வெல்லலாம் என்ற இலக்குடன் ‘மெல்போர்ன் ஸ்டார்ஸ்’ அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ‘பென் டங்க்’ மற்றும் ‘மார்க்கஸ் ஸ்டோய்னஸ்’ களமிறங்கினர். இலக்கு பெரியதாக இல்லாததால் இந்த ஜோடி அவசரப்படாமல் ஏதுவான பந்துகளை மட்டும் அடித்து ஆடி ரன்களை சேர்த்தனர்.
கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ‘பென் டங்க்’ இந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தை மீட்டெடுத்து அரைசதத்தை கடந்தார். மறுமுனையில் ஸ்டோய்னஸ் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ‘ஸ்டார்ஸ்’ அணி எளிதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அணியின் ஸ்கோர் 93 ரன்களை எட்டிய நிலையில், ஸ்டோய்னஸ் 39 ரன்களில் ‘கேமரூன் பாய்ஸ்’ பந்துவீச்சில் போல்டாக, ஆட்டத்தின் போக்கு மாறத் தொடங்கியது. அடுத்து களம் கண்ட ‘ஹாண்ட்ஸ்காம்ப்’ ரன் ஏதும் எடுக்காமலும், கேப்டன் ‘மேக்ஸ்வெல்’ 1 ரன்னிலும் ‘கிறிஸ் டிரிமைன்’ வீசிய ஒரே ஓவரில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக விளையாடி வந்த பென் டங் 57 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் ‘மெல்போர்ன் ரெனகேட்ஸ்’ பக்கம் திரும்பியது.
தொடர்ந்து ‘ரெனகேட்ஸ்’ அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீச, நெருக்கடியை சமாளிக்க முடியாமல் ‘ஸ்டார்ஸ்’ அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ‘டுவைன் பிராவோ’ 3 ரன்களில் ஆட்டமிழக்க அதோடு ‘ஸ்டார்ஸ்’ அணி நம்பிக்கையும் தகர்ந்தது. முடிவில் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ‘ரெனகேட்ஸ்’ அணி தரப்பில் டிரிமைன், பாய்ஸ் மற்றும் கிறிஸ்டியன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன் மூலம் ஆரோன் பின்ச் தலைமையிலான ‘மெல்போர்ன் ரெனகேட்ஸ்’ அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ‘பிக் பாஷ்’ கோப்பையை வென்று அசத்தியது.
மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு உறுதுணையாக இருந்த ஆல்ரவுண்டர் ‘டேனியல் கிறிஸ்டியன்’ ஆட்டநாயகன் விருது பெற்றார்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்