தென்னாபிரிக்க ஆடுகளங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ‘அபாயகரமான ஆடுகளங்கள்’ என பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறியுள்ள கருத்துக்கு தென் ஆப்பிரிக்க வீரர் ‘தெம்பா பவுமா’ தகுந்த பதிலடி கொடுத்துள்ளார். அது குறித்த விரிவான செய்தியை இங்கு பார்ப்போம்.
பாகிஸ்தான் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ‘சென்சூரியன்’ மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்ஆப்ரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது கேப்டவுன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க இயலாமல் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
#மிக்கி ஆர்தரின் சர்ச்சை கருத்து :
இதுகுறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் ‘மிக்கி ஆர்தர்’ அளித்துள்ள பேட்டியில் தென்ஆப்பிரிக்க ஆடுகளங்களை ‘டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்ற ஆடுகளங்கள்’ என கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “தென் ஆப்பிரிக்கா ஆடுகளங்களான ‘சென்சூரியன்’ மற்றும் ‘கேப்டவுன்’ ஆடுகளங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு லாயக்கற்ற அபாயகரமான ஆடுகளங்கள் ஆகும். தற்போது ஆட்டம் நடைபெறும் ‘கேப்டவுன்’ ஆடுகளத்தில் 2 ஆம் நாளில் நாம் பல்வேறு மாற்றங்களை காண முடிந்தது. குட் லெந்தில் வீசப்படும் பந்துகளும் அதிகம் பவுன்ஸ் ஆவதை காண முடிந்தது”.
#தெம்பா பவுமா-வின் பதிலடி :
மேலும் அவர் கூறுகையில் “தென்னாபிரிக்கா கேப்டன் ‘டு பிளிசிஸ்’ன் கையில் பல்வேறு முறை பந்து தாக்கியது. மேலும் தென் ஆப்பிரிக்க வீரர் ‘தெம்பா பவுமா’ன் இடுப்பு பகுதியும் பந்து பலமாக தாக்கியது. இதனால் சுமார் 7 முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. தற்போதைய தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களின் தரம் குறைந்து விட்டது” இவ்வாறு ‘மிக்கி ஆர்தர்’ கூறினார்.
மிக்கி ஆர்தரின் இந்த கருத்து தென்ஆப்பிரிக்க வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் 75 ரன்கள் சேர்த்த தென் ஆப்பிரிக்க வீரர் ‘தெம்பா பவுமா’ அளித்துள்ள பேட்டியில், “இந்த பிட்ச் உண்மையிலேயே ஒரு சவாலான, கடினமான பிட்ச். ஆனால் பாகிஸ்தான் பயிற்சியாளர் கூறுவது போல இது ஒரு ‘அபாயகரமான பிட்ச்’ இன்று கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. டெஸ்ட் போட்டிகளில் பந்து உடலை தாக்குவது சாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்று தான்”.
மேலும் பவுமா கூறுகையில் “நான் இந்த போட்டியில் 75 ரன்கள் எடுத்தேன். கேப்டன் டு பிளிசிஸ் அற்புத சதம் அடித்தார். தற்போது நானும் உயிரோடுதான் இருக்கிறேன். டு பிளிசிசும் உயிரோடுதான் இருக்கிறார்”. இவ்வாறு ‘தெம்பா பவுமா’ அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும் மிக்கி ஆர்தர் ‘அபாயகரமான ஆடுகளம்’ எனக் கூறியுள்ள கேப்டவுனில் தென்னாபிரிக்க அணி முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்தது. மார்கரம் 78 ரன்கள், டு பிளிஸிஸ் 103 ரன்களும், பவுமா 75 ரன்களும், டீ காக் 59 ரன்களும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பாகிஸ்தான் அணியும் தற்போது தனது இரண்டாவது இன்னிங்சை முதல் இன்னிங்சை விட சிறப்பாகவே ஆடி வருகிறது.
எழுத்து : விவேக் இராமச்சந்திரன்.