ஒவ்வொரு உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு அனைத்து அணிகளும் தனது அணியில் பல மாற்றங்களைக் கொண்டு வருவது வழக்கம். அதே போன்று தான் இந்திய அணியும் 2011 உலக கோப்பையை வெற்றியுடன் முடித்தபோதும் அணியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. 2011க்கு பிறகு இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ஃபார்மின்றி தவித்தனர். மேலும் சச்சின் டெண்டுல்கரின் ஓய்வு , யுவராஜ் சிங்கின் கேன்சர் பாதிப்பு உள்ளிட்டவை அணியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. சேவாக் மற்றும் கம்பீர் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்
தொடக்க வீரர்களாக ரோஹித், தவான்:
அதே நேரத்தில் 2013 இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்த சேம்பியன் டிராபிக்கு பல இளைஞர்களை அடக்கிய தோனி தலைமையிலான இந்திய அணி கிளம்பியது. அதில், ஷிகர் தவானுடன் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் தொடக்க வீரராகக் களமிறங்குவாரென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தோனி அங்குத் தான் ஒரு செக் வைத்தார், தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இருவரும் இணைந்து 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர் சிப் அமைத்தனர். இந்த நிகழ்வு தான் இந்திய கிரிக்கெட் அணியைக் கடந்த ஆறு ஆண்டுகளாகப் புரட்டிப் போட்டுள்ளது எனலாம்.
ரன் குவிப்பில் டாப் 3:
தொடக்க வீரர்களாகத் தவான், ரோஹித் சர்மா, மூன்றாம் வீரராக விராட் கோலியென மூன்று பேரும் முக்கிய தூண்களாக விளங்கினர். இவர்களின் துணையால் பல தொடர்களில் அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றது இந்திய அணி. குறிப்பாக உள்ளூரில் நடந்த அனைத்து ஒருநாள் தொடர்களையும் லாவகமாகக் கைப்பற்றியது இந்திய அணி.இவர்கள் மூவரும் தனது விக்கெட்டை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கமாட்டார்கள் . மூவரில் ஒருவராவது ஒவ்வொரு போட்டியிலும் சதம் விளாசி விடுவார்கள். அதிலும் ரோஹித் சர்மா 2013ல் தொடக்க வீரராகக் களமிறங்கிய பிறகு , ஐந்து ஆண்டுகளில் 20 சதம் அடித்துள்ளார், அதில் மூன்று இரட்டை சதமும் அடக்கம். விராட் கோலியை பற்றிச் சொல்லவே தேவையில்லை அவர் ரன் மெசின் என்பது அனைவரும் அறிந்ததே. ஷிகர் தவான் தனது பங்குக்குப் பல சதங்களை விளாசித் தனது சராசரியை 50க்கு குறையாமல் வைத்துள்ளார்.
உலகின் சிறந்த டாப் 3:
2015ம் ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாடுகளில் இந்தியாவின் டாப் 3 தான் சிறந்ததாக உள்ளது. அதிக ரன்கள் குவித்த இணை வரிசையில் டாப் 5 இடங்களில் இந்திய அணியினர் தான் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
இந்த மூவரும்தான் இந்திய அணி குவித்த மொத்த ரன்களில் 63 சதவித ரன்களை குவித்துள்ளது. அதாவது இந்திய அணியினரின் ரன்களில் பாதிக்கு மேல் குவித்துள்ளது.
ஏன் பலவீனம்?
சரி, இப்படி இருக்கையில் இந்திய அணியின் பலவீனமாக இவர்கள் மாறினார்கள் என்பது தான் இங்கே கேள்வி. இவர்கள் மூவரும் பெரும்பாலும் ஐம்பது ஓவர்களில் 30 முதல் 40 ஓவர்கள்வரை பேட்டிங் செய்கின்றனர். இதன் காரணமாகவே மிடில் வரிசையில் இறங்கும் வீரர்கள் நிறைய பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் போகிறது. அதுவும் கடைசிஅதிரடியாக ரன்கள் குவிக்க வேண்டியுள்ளதால் அவர்கள் தங்கள் விக்கெட்டை விரைவில் இழக்க நேரிடுகிறது. இதனால், பல வீரர்கள் தங்கள் ஃபார்மை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போகிறது.
நம்பர் 4 மற்றும் மிடில்வரிசை குறைபாடு:
இந்திய அணியின்பெரிய தலைவலியாக உள்ளது நம்பர் 4 இடம்தான். அதற்கு, இந்திய அணி பயன்படுத்திய வீரர்கள் மிக அதிகம். (எ.கா.) லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரகானே, ஸ்ரேயாஷ் அய்யர், தோனி, யுவராஜ் சிங், தினேஷ் கார்த்திக் எனப் பட்டியல் நீள்கிறது. இவர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையில் மிக வல்லமை மிக்கவர்கள். ஆனால், நெருக்கடி சூழல்கள் காரணமாக ஃபார்மை இழந்து தவிக்கின்றனர். இவர்கள் போதிய போட்டி பயிற்சி இல்லாததாலேயே இவர்கள் இந்தச் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
டாப் 3 சொதப்பிய தருணங்கள்:
2015 உலக கோப்பை அரைஇறுதி போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 329 ரன் இலக்கை நோக்கி விளையாடியது இந்திய அணி. தொடக்க வீரர்களான தவான், ரோஹித் ஜோடி 12 ஓவர்களில் 76 ரன்கள் குவித்தது. அப்போது ஆடிக்கொண்டிருந்த தவான் 42 ரன்களில் ஆட்டம் இழந்தார். பின்பு, விராட் கோலி 1(13) மற்றும் ரோஹித் 32 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இவர்கள் மூவரும் அரைசதம் அடிக்காமல் போவது அந்தத் தொடரில் அதுவே முதல்முறை. பின்பு, சிரான வேகத்தில் ரன் குவிக்க முடியவில்லை. அதனால், இந்தியா வெறுங்கையுடன் நாடு திரும்பியது. அதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது இரண்டுமுறை 350க்கு மேல் 45 ஓவர்களுக்குள் சேஸ் செய்து தலா 9 மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆக, இவர்கள் மூவரும் பேட்டிங்கில் சொதப்புவது அரிது, அந்த நேரத்திலும் மிடில்வரிசை சரியாக அமையாத காரணத்தால் தோல்வி அடைய நேரிடுகிறது.
இன்னும் 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனல் எதிர் பாகிஸ்தான், 2014 டி20 ஃபைனல் எதிர் இலங்கை, 2016 டி20 அரைஇறுதி எதிர் மேற்கு இந்திய தீவுகள் என முக்கிய தொடர்களை மேலே கூறிய காரணங்களாலேயே தோற்றோம்.
அம்பட்டி ராயுடு:
எனவே இதைச் சரி செய்யவே இந்திய நிர்வாகம் கடுமையாகப் போராடி வருகிறது. இறுதியில் அம்பட்டி ராயுடுவை நம்பர் 4 இடத்தில் இறக்க முடிவுசெய்துள்ளது. பொருத்திருந்து பார்க்கலாம் 2019 உலக கோப்பை தொடரில் இவர் கைகொடுப்பாரா என்று.