இங்கிலாந்தில் நடைபெறும் பிரபல உள்ளூர் T-20 போட்டி தொடரான 'வைட்டாலாட்டி பிளாஸ்ட்' (Vitality Blast) கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகளின் கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் 'மிடில்செக்ஸ்' அணி 'சோமர்செட்' அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற சோமர்செட் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்ததது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு ஆரம்பமே பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. இந்த T-20 தொடரில் அதிக ரன்கள் விளாசிய 'பாபர் அசாம்' முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இருப்பினும் சரிவை சமாளித்த அந்த அணிக்கு விக்கெட் கீப்பர் 'டாம் பேன்டன்' மற்றும் கேப்டன் 'டாம் அபெல்' சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரை சதத்தை கடந்த பேன்டன் 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் அபெல் சதம் அடித்து அசத்தினார். ஆனால் சதம் அடித்த உடனே 47 பந்துகளில் 101 ரன்கள் எடுத்த நிலையில் இவர் ஆட்டமிழந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சோமர்செட் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் குவித்தது. மிடில்செக்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக சிறப்பாக பந்துவீசிய 'ரொனால்ட் ஜோன்ஸ்' 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 227 ரன்கள் எடுத்தால் கால் இறுதி சுற்றை உறுதி செய்யலாம் என்ற கடின இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் கண்டது. களமிறங்கியது முதலே மிடில்செக்ஸ் அணி பேட்ஸ்மேன்கள் மட்டையை சுழற்றினார். தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் 'டேவிட் மலான்' 14 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்த நிலையிலும், 'பால் ஸ்ட்ரில்லிங்' 25 ரன்கள் சேர்த்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் 'டிவில்லியர்ஸ்' 16 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க மிடில்செக்ஸ் அணி சிறிது தடுமாற்றத்தை கண்டது. ஆனால் அடுத்து களமிறங்கிய இங்கிலாந்தின் நட்சத்திர வீரர் 'இயன் மோர்கன்' ஆட்டத்தை தனது கையில் எடுத்துக் கொண்டார்.
சோமர்செட் அணி பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசி அதிரடியாக ரன்கள் சேர்த்தார் மோர்கன். சிக்ஸர் விளாசி 21 பந்துகளில் அரைசதத்தை கடந்த மோர்கன் அதன்பிறகும் தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். இவரின் அதிரடியால் மிடில்செக்ஸ் அணி இலக்கை நோக்கி ராக்கெட் வேகத்தில் முன்னேறியது.
இறுதியாக 'வான் டெர் மார்வே' பந்தை சிக்சருக்கு தூக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார் மோர்கன். இவரின் அசாத்திய அதிரடியால் மிடில்செக்ஸ் அணி 17 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இயன் மோர்கன் 29 பந்துகளில் 83 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும்.
இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்த மிடில்செக்ஸ் அணி இதன் மூலம் ஒட்டுமொத்த 'வைட்டாலாட்டி பிளாஸ்ட்' தொடரில் ஒரு அணி வெற்றிகரமாக சேசிங் செய்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையை படைத்தது. மேலும் ஒட்டுமொத்த T-20 வரலாற்றில் இது 4-வது அதிகபட்ச சேசிங் சாதனையாக பதிவாகியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 244 ரன்களை சேசிங் செய்தது அதிகபட்ச சாதனையாக உள்ளது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய 'இயன் மோர்கன்' ஆட்டநாயகன் விருது பெற்றார்.