இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி-20 போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. ஆனால் இந்திய அணியின் வெற்றி, ரோஹித் சர்மாவின் சாதனைகள் அனைத்தையும் மறைக்கும் படியான ஒரு சர்ச்சைக்குரிய சம்பவம் இந்த போட்டியில் நிகழ்ந்தது.
இந்த ஓவரில் குரூனால் பாண்டியா வீசிய கடைசி பந்தில் மிட்செல் தடுத்தாட முயன்றபோது பந்து அவரது காலுறையை தாக்கியது. இந்திய வீரர்கள் அப்பீல் கேட்க கள நடுவர் அவுட் வழங்கினார். ஆனால் உடனே மிட்செல் நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் (ரி-வியூ) செய்தார். உடனே இது மூன்றாவது நடுவரின் பார்வைக்கு சென்றது.டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு சென்ற போட்டியின் அசத்தல் நாயகன் ‘டிம் செய்ஃபர்ட்’ 11 ரன்களில் ஆட்டமிழந்தது ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் ஆட்டத்தின் ஆறாவது ஓவரை குரூனால் பாண்டியா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அதிரடி வீரர் ‘காலின் மன்ரோ’வை ஆட்டமிழக்கச் செய்தார். அடுத்ததாக ஆல்ரவுண்டர் ‘டேரெல் மிட்செல்’ களமிறங்கினார்.
ரீப்ளேவில் அதிர்வுகளை கண்டறியும் ‘ஸ்னிக்கோ மீட்டர்’ தொழில்நுட்பத்தில் பந்து பேட்டில் பட்டதற்கான எந்தவித அதிர்வுகளையும் காண முடியவில்லை. ஆனால் அடுத்தபடியாக பார்த்த ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தில் பந்து பேட்டில் உரசிக் கொண்டு செல்வது தெளிவாக தெரிந்தது. பந்து ஸ்டம்பை தாக்கினாலும், பந்து பேட்டில் உரசுவதால் ‘நாட் அவுட்’ தீர்ப்பையே 3-வது நடுவர் வழங்குவார் என களத்தில் இருந்த வீரர்களும், ரசிகர்களும் எதிர்பார்த்தனர்.
ஆனால் 3-வது நடுவர் ‘ஷான் ஹைக்’ அவுட் என தீர்ப்பளித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனால் களத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் நடுவருடன் ஏதோ பேச, இறுதியாக ‘டேரெல் மிட்செல்’ நடுவரின் தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து கடும் ஏமாற்றத்துடன் நடையை கட்டினார்.
அதன்பிறகு தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த இலக்கை இந்திய அணி ரோகித் சர்மாவின் அரை சதத்துடன் 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த மோசமான தீர்ப்பை முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கடுமையாக சாடியுள்ளனர். இதுகுறித்து முன்னணி வர்ணனையாளராக உள்ள ‘ஹர்ஷா போகிளே’ டுவிட்டரில் “இந்தத் தீர்ப்பில் பேட்ஸ்மேன் ஏமாற்றத்துடன் பெவிலியன்க்கு திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. 3-வது நடுவர் ‘ஹாட் ஸ்பாட்’ தொழில்நுட்பத்தை விட்டு ‘ஸ்னிக்கோ மீட்டர்’ தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது உண்மையிலேயே மோசமானதாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “இந்த மோசமான தீர்ப்பினால் நியூசிலாந்து அணி விக்கெட்டை மட்டுமல்லாது ‘ரி-வியூ’யும் இழந்தது. இந்த தீர்ப்பினால் டி.ஆர்.எஸ் முறையையே நடுவர் தோற்கடித்து விட்டார்”. இவ்வாறு சோப்ரா தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசமான தீர்ப்பு நியூசிலாந்து அணிக்கு மிகுந்த பின்னடைவாக மாறி ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது என்பதும் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்