இந்திய பெண்கள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் , உலகில் 200 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற முதல் கிரிக்கெட் வீராங்கனை ஆவார். இவர் ஹமில்டனில் நடந்த நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது 200 வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். ஆனால் நியூசிலாந்து அணி இப்போட்டியில் எளிதாக வென்றது.
மிதாலி ராஜ் 1999 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 263 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளது. அதில் 200 ஒருநாள் போட்டிகளில் மிதாலி ராஜ் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மிதாலி ராஜ் 10 டெஸ்ட் போட்டிகளிலும் , 85 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
மிதாலி ராஜ் தனது 199 வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்ததிற்கு எதிராக 63 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். ஆனால் தனது 200வது ஒருநாள் போட்டியில் அவ்வளவாக ரன்கள் அடிக்காமல் தனது விக்கெட்டை இழந்தார். இவர் 200வது ஒருநாள் போட்டியில் 28 பந்துகளை எதிர்கொண்டு 9 ரன்களை மட்டுமே அடித்து காஸ்பெரெக் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த போட்டி நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியாகும். நியூசிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றியை பெற்றது. இந்திய அணி ஏற்கனவே முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
36 வயதான மிதாலி ராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் மொத்தமாக 51.33 சராசரியுடனும், 7 சதங்களுடனும் 6622 ரன்களை குவித்துள்ளார். இவர் ஒருநாள் போட்டிகளில் ஆச்சரியமூட்டும் வகையில் 52 அரை சதங்களை விளாசியுள்ளார். முந்தைய காலங்களில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒரே வீரர் மிதாலி ராஜ் மட்டுமே.
மிதாலி ராஜ்-ற்குப் பிறகு இந்த பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த சார்லோட் எட்வர்ட்ஸ் உள்ளார். இவர் 191 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 38.16 சராசரியுடனும் 11 சதங்களுடன் 5992 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த பெலிந்தா கிளார்க் உள்ளார். இவர் 118 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 47.49 சராசரியுடன் 4844 ரன்களை குவித்துள்ளார்.
இந்திய வீராங்கனைகளில் பார்க்கும் போது மிதாலி ராஜ்-ற்கு அடுத்ததாக அஞ்சும் சோப்ரா அதிக ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று உள்ளார். இவர் இந்திய மகளிர் அணிக்காக 127 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 31.38 சராசரியுடனும் , 1 சதத்துடன் , 2856 ரன்களை அடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் தற்போதைய இந்திய மகளிர் அணியின் டி20 கேப்டன் ஹார்மிபிரிட் காயுர் உள்ளார். இவர் மொத்தமாக 93 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 38.52 சராசரியுடன் 2244 ரன்களை அடித்துள்ளார்.