நடந்தது என்ன?
2019 உலகக் கோப்பைக்காக 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியின் இறுதி வீரர்கள் பட்டியலை இன்று(மே 20) அறிவித்தது. அனுபவ பந்துவீச்சாளர் முகமது அமீர், வஹாப் ரியாஜ், ஆகிய இருவரும் ஜீனைத் கான், ஃபாஹீம் அஸ்ரப் ஆகியோருக்கு பதிலாக பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். பேட்டிங்கில் அபித் அலி-க்கு பதிலாக ஆஸீப் அலி சேர்க்கப்பட்டுள்ளார். அபித் அலி, ஃபாஹீம் அஸ்ரப், ஜீனைத் கான் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் முதன்மை உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு தெரியுமா...
இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அனுபவ வீரர்கள் இன்றி முதன்மை உலகக் கோப்பை அணியை அறிவித்திருந்தது. முகமது அமீர் பாகிஸ்தான் அணியில் இடம்பெறாதது பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களால் விவாதம் எழுப்பப்பட்டது. இருப்பினும் முகமது அமீர் மற்றும் ஆஸீப் அலி ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்தனர்.
கதைக்கரு
பாகிஸ்தான் அணி இங்கிலாந்து எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 4-0 என தோல்வியை தழுவியது. இதனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என பாகிஸ்தான் தேர்வுக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இன்ஜ்மாம்- உல்-ஹக் தலைமையிலான பாகிஸ்தான் தேர்வு குழு முகமது அமீர், ஆஸிப் அலி, வஹாப் ரியாஜ் ஆகியோர் மீண்டும் பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் சேர்த்தனர். ஏற்கனவே பாகிஸ்தான் உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஜீனைத் கான், ஃபஹீம் அஸ்ரப், அபித் அலி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஆஸீப் அலி மற்றும் முகமது அமீர் ஆகியோர் உலகக் கோப்பை அணியில் இடம்பெறுவார்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் கணித்து வைத்திருந்தனர். ஆனால் வஹாப் ரியாஜ் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றது சற்று ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆஸீப் அலி சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் இரு அரைசதங்களை விளாசினார். உடற்நிலை சரியில்லாத காரணத்தால் முகமது அமீர் இங்கிலாந்து தொடரின் எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
வஹாப் ரியாஜ் கடைசியாக பாகிஸ்தான் அணிக்காக 2017ல் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றார். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் பிரிமியர் லீக்கில் வஹாப் ரீயாஜ்-இன் சிறப்பான ஆட்டத்திறனே அவர் உலகக் கோப்பை அணியில் இடம்பெற முக்கிய காரணமாக இருந்தது.
பாகிஸ்தான் இறுதி உலகக் கோப்பை அணி:
சஃப்ரஸ் அகமது(கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஆஸீப் அலி, பாபர் அஜாம், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் சோஹாய்ல், ஹாசன் அலி, இமாட் வாஷிம், இமாம்-உல்-ஹக், முகமது அமீர், முகமது ஹபீஜ், முகமது ஹஸ்னாய்ன், ஷதாப் கான், ஷாஹீன் அஃபிரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஜ்.
அடுத்தது என்ன?
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக சஃப்ரஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு எதிரான தொடரை 4-0 என இழந்து கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணி யாரும் கணிக்க முடியாத வகையில் சிறப்பான ஆட்டத்தை உலகக் கோப்பை தொடரில் வெளிபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.