டி10 என்ற 10 ஓவர் கிரிக்கெட் போட்டியானது கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் இரண்டாவது சீசன் நேற்று தொடங்கியது. இவ்வருடம் கடந்த வருடத்தை விட அதிக வீரர்கள் பங்கு பெற்றுள்ளனர். இவ்வருடத்தின் தொடக்க ஆட்டமே மிகப்பெரிய விருந்தாக டி10 ரசிகர்களுக்கு அமைந்தது. ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் நேற்று நடந்த போட்டியில் 12 பந்திலேயே அரை சதத்தை விளாசியதுடன் 16 பந்துகளில் 74 ரன்கள் விளாசி கராச்சி அணி வைத்த 95 இலக்கினை வெறும் 4 ஓவரில் சேஸிங் செய்தது ராஜ்புட் அணி.
சேஸிங் 95, முகமது ஷாஜாத் அசுர வேகத்துடன் இலக்கினை அடைய களமிறங்கினார். வீசப்பட்ட முதல் பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். பின்னர் அதே ஓவரில் வீசப்பட்ட மீதி 4 பந்துகள் பவுண்டரிகளாக மாற்றினார் முகமது ஷாஜாத். அவர் முதல் ஓவரிலேயே 5 பந்திற்கு 19 ரன்களை எடுத்தார். இரண்டாவது ஓவரில் மெக்கல்லம் அவருடன் கைகோர்த்து இலக்கின் பாதியை அடைந்தனர். மூன்றாவது ஓவர் முகமது ஷாஜாத் வசம் ஸ்ட்ரைக் வந்தது.
முகமது ஷாஜாத் இலங்கை ஆல்ரவுண்டரான தீசரா பெரரா வீசிய ஓவரில் 3 பவுண்டரிகள் , 3 சிக்சர்களை விளாசி 12 பந்தில் தனது அரை சதத்தை விளாசினார். அவர் 3வது ஓவர் முடிவில் 13 பந்துகளில் 56 ரன்களை அடித்திருந்தார். இலக்கினை அடைய இன்னும் 23 ரன்களே தேவைப்பட்டது. அப்போது 7 ஓவர் மீதமிருந்தது.
4வது ஓவர் பாவாத் அகமது வீசினார். முதல் 3 பந்து மிகவும் அமைதியாக சென்றது. பின்னர் 4 வது பால் ஸ்ட்ரைக் வந்த முகமது ஷாஜாத் ஹாட்ரிக் சிக்சர்ளை விளாசி 96 என்ற கராச்சியின் இலக்கினை வெறும் 4 ஓவரில் முடித்து வைத்தார்.
முகமது ஷாஜாத் 16பந்துகளில் 74 ரன்களை விளாசினார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் உள்ளடங்கும். இந்த போட்டியில் அவருக்கு வீசப்பட்ட அணைத்து பந்துகளையும் ரன்களாக மாற்றியுள்ளார். இந்த மேட்சில் ஒரேயொரு டாட் பால் மட்டுமே வந்தது. இதுஒரு மிகப்பெரிய சாதனை முறிவு மட்டுமல்லாமல் டி10 வரலாற்றில் அதிவேக அரை சதம் மற்றும் அதிகபட்ச தனிநபர் ரன்கள் என்ற இரு சாதனையையும் இந்த சீசனில் பதிவு செய்துள்ளார்.
ராஜ்புட் கேப்டன் மெக்கல்லம் டாஸ் வென்று ஃபில்டிங்கை தேர்வு செய்தார். கராச்சி அணிக்கு தொடக்கம் முதலே சிறப்பானதாக அமையவில்லை. ஆனால் கேப்டன் ஷேன் வாட்சன் நிதானமாக ஆடி 20 பாலில் 42 ரன்களை விளாசி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்களை இலக்காக நிர்ணயித்தார். ஆனால் முகமது ஷாஜாத் மிகவும் எளிதாக 4 ஓவரிலேயே மேட்சினை முடித்து வைத்தார்.ராஜ்புட் அணி 24 என்ற ரன்ரேட்டுடன் ஆட்டத்தை முடித்து வைத்தார். இது கிரிக்கெட் உலகில் அணைவரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன்மூலம் டி10 என்ற லீக் போட்டிகள் நடைபெறுவது தெரியாதவர்களுக்கு கூட அனைவரும் அறியும்படி அதிரடி தொடக்கத்துடன் இந்தாண்டு டி10 தொடங்கியுள்ளது. டி10 போட்டியானது சோனி இஎஸ்பிஎன்( Sony ESPN) சேனலில் ஒளிபரப்பப்படுகிறது.