2019 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜாஸ்பிரிட் பூம்ரா, புவனேஸ்வர் குமாருடன் சேர்ந்து முகமது ஷமியும் வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். பெங்கால் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி ஓடிஐ கிரிக்கெட்டிற்கு சிறந்த ஆட்டத்திறனுடன் மீண்டும் திரும்பியுள்ளார். இந்திய ஓடிஐ அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகவும் தற்போது திகழ்கிறார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான 2019 உலகக் கோப்பை தொடங்க 1 மாதங்களே உள்ளது. இந்தநிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் பாகிஸ்தானிற்கு எதிரான இந்திய அணியின் சாதனை தொடரும் என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி கடந்த இரு மாதங்களாக தனது உடல்நிலையில் அதிக அக்கறை கொண்டு கட்டுகோப்பாக வைத்துள்ளார். கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ தனது உடலின் எடையிலிருந்து 2 கிலோவை குறைத்தார். முகமது ஷமி தனது பௌலிங்கை தற்போது அதிகம் மெருகேற்றியுள்ளார். பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து ஒருநாள் தொடரில் தனது அதிரடி பந்துவீச்சால் ஆட்டநாயகன் விருதினையும் வென்றார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடரும் முகமது ஷமிக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது. இந்த ஆட்டத்தை இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை தொடரிலும் முகமது ஷமி வெளிபடுத்த அதிக வாய்ப்புள்ளது.
ஜீன் 16 அன்று ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்திய-பாகிஸ்தான் தகுதிச்சுற்று போட்டியில் தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்த போவதாக முகமது ஷமி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இந்த தகுதிச் சுற்று போட்டியானது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பிசிசிஐ உறுப்பினர்களால் பல்வேறு விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டது. இதற்கு காரணம் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த புல்வாமா தாக்குதல். இதனால் பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் இந்திய-பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது. ஆனால் ஐசிசி இந்த கோரிக்கையை நிராகரித்து அறிவித்தபடியே போட்டி நடக்கும் என தெரிவித்தது.
இந்திய-பாகிஸ்தான் போட்டி குறித்து முகமது ஷமி கூறியதாவது:
பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய அணியின் சாதனை வழக்கம்போல தொடரும். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. ஆட்டம் எந்த அணி பக்கம் வேண்டுமானலும் திரும்பலாம். பாகிஸ்தானிற்கு எதிராக இந்திய வீரர்களின் ஆட்டத்திறன் சிறப்பாகவே இருக்கும். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதை ரசிகர்கள் களத்தில் காணலாம்.
இந்திய சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்திறன் இங்கிலாந்து மைதானத்தில் இதுவரை சிறப்பாகவே இருந்துள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் இங்கிலாந்து மைதானத்தில் விளையாடியவர்கள் தான். இதனால் அதன் நுணுக்கங்களை நன்கு அறிந்திருப்பர். மேலும், எதிரணி பேட்ஸ்மேன்களை அதிக நேரம் மைதானத்தில் விளையாட விட மாட்டோம்.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஜீன் 5 அன்று ரோஸ் பௌல் கிரிக்கெட் ஆடுகளத்தில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள இருக்கிறது. முகமது ஷமியின் இந்த நம்பிக்கை மிகுந்த பேச்சு இந்திய வீரர்களிடையே ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.