சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஒவ்வொரு அணியிலும், பல திறமையான வீரர்கள் உள்ளனர். அந்த திறமையான வீரர்கள் சிறப்பாக விளையாடியது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக சதங்களையும் விளாசி உள்ளனர். அந்த வீரர்களைப் பற்றியும், எந்த அணிக்கு எதிராக அதிக சதங்களை விளாசி உள்ளனர் என்பதை பற்றியும், இங்கு விரிவாக காண்போம்.
#1) டொனால்ட் பிராட்மேன் ( இங்கிலாந்து அணிக்கு எதிராக )
பிராட்மேன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார். இவர் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். ஆனால் அதிலும் பல சாதனைகளைப் படைத்து விட்டு சென்றுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக மொத்தம் 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 5028 ரன்களையும், 19 சதங்களையும், மற்றும் 12 அரை சதங்களையும் விளாசியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 89.78 ஆகும். இவர் மொத்தம் 52 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 6996 ரன்களையும், 29 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) சுனில் கவாஸ்கர் ( மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், ஒரு காலகட்டத்தில் நமது இந்திய அணியில் முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேனாக திகழ்ந்த சுனில் கவாஸ்கர். இவர் மொத்தம் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 10122 ரன்களையும், 34 சதங்களையும், 45 அரை சதங்களையும் விளாசியுள்ளார். அதுவும் குறிப்பாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மொத்தம் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 2749 ரன்களையும், 13 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இவரது பேட்டிங் சராசரி 65.45 ஆகும்.
#3) ஜேக் ஹோப்ஸ் ( ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் இங்கிலாந்து அணியை சேர்ந்த ஜேக் ஹோப்ஸ். இவர் மொத்தம் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 5410 ரன்களையும், 15 சதங்களையும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது சராசரி 56.95 ஆகும். இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொத்தம் 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 3636 ரன்களையும், 12 சதங்களையும் விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவரது பேட்டிங் சராசரி 54.26 ஆகும்.
#4) சச்சின் டெண்டுல்கர் ( ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக )
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, இவர் முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மொத்தம் 39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 3630 ரன்களையும், 11 சதங்களையும், 16 அரைசதங்களையும் விளாசியுள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இவரது பேட்டிங் சராசரி 55.00 ஆகும். அதுமட்டுமின்றி இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 4 முறை டக் அவுட்டாகி வெளியேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.