தற்போது நமது இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நமது இந்திய அணி ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி, மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் நமது இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ளது.
நாளைய போட்டியில் நமது இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிடும். வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால், தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்படும். எந்த அணி வெற்றி பெறும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக சதம் விளாசி உள்ள இந்திய வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) விராட் கோலி ( 8 சதங்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்றால், அது விராட் கோலி தான். சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மத்தியில் நமது இந்திய அணி நல்ல நிலைமையில் இருப்பதற்கு, இவரும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின், இரண்டாவது ஒருநாள் போட்டியில் கூட விராட் கோலி சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 2032 ரன்களையும், 8 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) சச்சின் டெண்டுல்கர் ( 4 சதங்கள் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியின் ஜாம்பவான், சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சாதனைகளை படைத்து சென்ற ஒரே கிரிக்கெட் வீரர் இவர் தான். இவரது ஒரு சில சாதனைகள் தற்போது முறியடிக்க பட்டாலும், இன்னும் இவரது பல சாதனைகள் முறியடிக்கபடாமல் தான் உள்ளது என்பது தான் உண்மை.
வளர்ந்து வரும் பல இளம் வீரர்களுக்கு, இவர் ஒரு ரோல் மாடலாக திகழ்ந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சதத்தில் சதம் அடித்த ஒரே வீரர் இவர் தான். இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மொத்தம் 39 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 1573 ரன்களையும், 4 சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இவரது பேட்டிங் சராசரி 52.43 ஆகும்.