கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்தே, இந்திய அணி என்றாலே தனி மரியாதை உண்டு. அந்த மரியாதைக்கு காரணம் இந்திய அணியில் விளையாடிய பல திறமையான வீரர்கள் தான்.
உதாரணமாக சச்சின் மற்றும் அனில் கும்ப்ளே போன்ற ஜாம்பவான்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, இந்திய அணிக்கு பெருமை சேர்த்து சென்றுள்ளனர். ஆனால் இவர்கள் ஓய்வு பெற்றாலும், தற்போது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான விளையாட்டின் மூலம் இந்திய அணிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தலைசிறந்த அணியாகத் தான் திகழ்ந்து வருகிறது. இந்திய அணியில் சிறப்பாக பேட்டிங் செய்து அதிக முறை இரட்டை சதம் விளாசிய வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) விராட் கோலி ( 6 முறை )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், தற்போது உள்ள நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இவர் தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நம்பர்-1 பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார். அனைத்து போட்டிகளிலுமே சிறப்பாக ரன்களை அடித்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், புது சாதனைகளை படைத்து வருகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில், குறைந்த இன்னிங்சில் 10,000 ரன்களை கடந்த ஒரே வீரர் என்ற சாதனையையும் தன் வசம் வைத்துள்ளார். இவர் இதுவரை 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 6613 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 25 சதங்களையும், 6 முறை இரட்டை சதங்களையும் விளாசியுள்ளார்.
#2) வீரேந்தர் சேவாக் ( 6 முறை )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் அதிரடிக்கு பெயர் போன வீரேந்தர் சேவாக். இவர் ஒருநாள் போட்டிகளில், பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கக் கூடிய திறமை படைத்தவர். ஒருநாள் போட்டிகளில் மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாக விளையாடக் கூடியவர். இவர் களத்தில் நிற்கும் வரை ரன்கள் விரைவாக வந்து கொண்டே இருக்கும். இவர் மொத்தம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில், 8586 ரன்களை அடித்துள்ளார். அது மட்டுமின்றி 23 சதங்களையும், 6 முறை இரட்டை சதங்களையும் விளாசியுள்ளார். இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) சச்சின் டெண்டுல்கர் ( 6 முறை )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் படைக்காத சாதனைகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டிலும் அதிக சதங்கள் விளாசிய ஒரே வீரர் இவர் தான். இவர் மொத்தம் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 15921 ரன்களை குவித்துள்ளார். இதில் 51 சதங்களும், 68 அரை சதங்களும், மற்றும் 6 இரட்டை சதங்களும் அடங்கும்.