அதிரடிக்கு பெயர் போன தொடர் என்றால், அது ஐபிஎல் தொடர் தான். பல அதிரடி வீரர்களும் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர்களும் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு விளையாடுவார்கள். எனவே தான் இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் ஆனது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள், பல போட்டிகளில் டக் அவுட் ஆகி உள்ளனர். அதேபோல் இந்த ஐபிஎல் தொடரிலும் சில கிரிக்கெட் வீரர்கள், அதிக போட்டிகளில் டக் அவுட் ஆகி உள்ளனர். அந்த வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ஹர்பஜன் சிங் ( 13 முறை )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங். இவர் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் மிக அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர். 2008 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஏலத்தில், இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இவர் இந்திய அணிக்காக விளையாடிய ஒருநாள் போட்டிகளில், மொத்தம் 269 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஆனால் இவர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவர் மொத்தம் 13 முறை ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆகி உள்ளார்.
#2) பியூஸ் சாவ்லா ( 12 முறை )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பியூஸ் சாவ்லா. இவர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்.
இவரும் ஐபிஎல் தொடரில் மிக அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர். இவர் ஐபிஎல் தொடரில் இதற்கு முன்பாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் ஐபிஎல் தொடரில் 146 விக்கெட்டுகளை பியூஸ் சாவ்லா கைப்பற்றியுள்ளார். அதுமட்டுமின்றி 12 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.
#3) மணிஷ் பாண்டே ( 12 முறை )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் மணிஷ் பாண்டே. இவர் இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகவும், விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை மொத்தம் 124 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 2553 ரன்களையும், 1 சதமும், 12 அரை சதங்களையும், விளாசியுள்ளார். மணிஷ் பாண்டே இதுவரை மொத்தம் 12 முறை ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.