அதிரடி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருவது ஐபிஎல் தொடர் தான். அதற்கு காரணம் ஐபிஎல் தொடரில், ஒவ்வொரு போட்டியிலும் இறுதிவரை அதிரடிக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இருக்காது. எனவேதான் இந்த ஐபிஎல் தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 11 வருடமாக நமது இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆகியுள்ள வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) அஜிங்கிய ரஹானே ( 11 முறை )
அஜிங்கிய ரஹானே தற்போது நமது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாட சரியாக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை இந்திய அணியில் தற்போது பிடித்துள்ளார். தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மிடில் ஆர்டரில் நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்.
இந்த ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இதுவரை மொத்தம் 136 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3745 ரன்களையும், 27 அரை சதங்களையும், 2 சதங்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் இதுவரை மொத்தம் 11 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.
#2) அம்பத்தி ராயுடு ( 11 முறை )
நமது இந்திய அணியில் மிடில் ஆர்டரில் சிறப்பாக பேட்டிங் செய்து வருபவர் அம்பத்தி ராயுடு. ஆனால் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக, நமது இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த ஒருநாள் தொடரில் அம்பத்தி ராயுடு தொடர்ந்து சொதப்பி வந்தார். எனவே தேர்வு குழு, அம்பத்தி ராயுடுவை உலக கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரும் இவருக்கு சிறப்பாக அமையவில்லை. உலக கோப்பைக்கான இந்திய அணியில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், அவர்களுக்கு பதில் அம்பத்தி ராயுடு விளையாடுவார் என்று இந்திய கிரிக்கெட் தேர்வு குழு தெரிவித்துள்ளது. இவர் இதுவரை மொத்தம் 141 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 3231 ரன்களையும், 18 அரை சதங்களையும், 1 சதமும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 11 முறை ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) மந்தீப் சிங் ( 10 முறை )
மந்தீப் சிங், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல், தற்போது வரை ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். இவர் இதற்கு முன்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன். இவர் இதுவரை ஐபிஎல் தொடரில் சொல்லும் அளவிற்கு பெரிதாக ஏதும் அதிரடி காட்டவில்லை. மொத்தம் 5 அரைசதங்கள் மட்டுமே ஐபிஎல் தொடரில் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இதுவரை ஐபிஎல் தொடரில் 10 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.