அதிரடிக்கும், விறுவிறுப்புக்கும், பஞ்சம் இல்லாத ஒரு தொடர் என்றால், அது ஐபிஎல் தொடர் தான். வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த ஐபிஎல் தொடரானது ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வண்ணம் அமைந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது நமது இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 வருடமாக பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதில் ஒரு சில பேட்ஸ்மேன்கள், அதிக போட்டிகளில் டக் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்துள்ளனர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) பார்த்திவ் படேல் ( 12 முறை )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வரும் பார்த்திவ் படேல். இவர் ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து தற்போது வரை விளையாடி வரும் வீரர்களில் ஒருவர். இவர் இதற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகளுக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளை விளாசுவார். இவர் இதுவரை மொத்தம் 135 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதில், 2758 ரன்களையும் 13 அரை சதங்களையும் விளாசியுள்ளார். ஆனால் இவர் ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட சதம் விளாசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி பார்த்திவ் படேல் மொத்தம் 12 முறை ஐபிஎல் தொடரில் டக் அவுட் ஆகி உள்ளார்.
#2) கௌதம் கம்பீர் ( 12 முறை )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான கௌதம் கம்பீர். இவர் சில வருடங்களாக கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால் கடந்த 2018 ஆம் வருடம் டெல்லி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டார். அதன் பின்பு ஸ்ரேயாஸ் ஐயர்- க்கு கேப்டன் பதவியை கொடுத்து விட்டு, தான் விளையாடுவதை நிறுத்திவிட்டார். இவர் மொத்தம் 154 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அதில் 4217 ரன்களையும், 36 அரை சதங்களையும், விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி 12 முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) ரோகித் சர்மா ( 12 முறை )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில், இவர் இரண்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது.
அதில் இரண்டு முறை ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா இதுவரை மொத்தம் 182 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 4721 ரன்களையும், 34 அரை சதங்களையும், 1 சதத்தையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரில் 12 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.