ஐபிஎல் தொடரில் பல முன்னணி நட்சத்திர பேட்ஸ்மேன்கள் மற்றும் பல திறமையான பந்து வீச்சாளர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். பல பந்துவீச்சாளர்கள் இந்த ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். ஆனால் ஒருசில பந்துவீச்சாளர்கள் தான், ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். அந்த பந்து வீச்சாளர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) அமித் மிஸ்ரா ( மூன்றுமுறை )
2008 ஆம் ஆண்டு முதல் ஹாட்ரிக் விக்கெட்:
அமித் மிஸ்ரா 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிகமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2008 ஆம் ஆண்டு அமித் மிஸ்ரா டெல்லி அணிக்காக விளையாடினார். அந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் டெல்லி மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதினர். அந்த போட்டியில் ரவி தேஜா மற்றும் பிரக்யான் ஓஜா மற்றும் ஆர் பி சிங் ஆகிய மூன்று வீரர்களின் விக்கெட்டுகளை தொடர்ந்து மூன்று பந்துகளில் கைப்பற்றினார் அமித் மிஸ்ரா. இதுதான் இவரது முதல் ஹாட்ரிக் விக்கெட் ஆகும்.
2011 ஆம் ஆண்டு இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட்:
2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் டெல்லி மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதினர். அந்தப் போட்டியில் 16 ஆவது ஓவரை வீச வந்தார் அமித் மிஸ்ரா. இந்த ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் மந்தீப் சிங், ரியான் மெக்லாரன் மற்றும் ரியான் ஹரிஸ் ஆகிய மூன்று வீரர்களின் விக்கெட்டுகளை தொடர்ச்சியாக கைப்பற்றினார் அமித் மிஸ்ரா.
2013ஆம் ஆண்டு மூன்றாவது ஹாட்ரிக் விக்கெட்:
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடினார் அமித் மிஸ்ரா. அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் புனே மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதினர். அந்த போட்டியில் 19-வது ஓவரை வீச வந்தார் அமித் மிஸ்ரா. அந்த ஓவரில் அசோக் டிண்டா,புவனேஸ்வர் குமார் மற்றும் ராகுல் சர்மா ஆகிய மூன்று வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் கைப்பற்றினார். இது அமித் மிஸ்ராவின் மூன்றாவது ஹாட்ரிக் விக்கெட் ஆகும்.
#2) யுவராஜ்சிங் ( 2 முறை )
2009 ஆம் ஆண்டில், இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் யுவராஜ் சிங்:
2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடினார் யுவராஜ் சிங். அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதினர். அந்தப் போட்டியில் 12 ஆவது ஓவரை வீச வந்தார் யுவராஜ் சிங். அந்த ஓவரின் கடைசி 2 பந்துகளில், ஜேக்யூஸ் காலிஸ் மற்றும் ராபின் உத்தப்பா ஆகிய இரண்டு வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் பின்பு 14வது ஓவரின் முதல் பந்தில் மார்க் பவுச்சர் விக்கெட்டை வீழ்த்தினார் யுவராஜ் சிங். இதுதான் இவரது முதல் ஹாட்ரிக் விக்கெட் ஆகும்.
இதே ஆண்டில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் தனது ஓவரில் கிப்ஸ், வேணுகோபால், மற்றும் சைமன்ஸ் ஆகிய மூன்று வீரர்களின் விக்கெட்டுகளை தொடர்ந்து மூன்று பந்துகளில் கைப்பற்றினார். இது இவரது இரண்டாவது ஹாட்ரிக் விக்கெட் ஆகும்.