சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், விளையாடும் அனைத்து பேட்ஸ்மேன்களும் பல வழிகளில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வருகின்றனர். ஆனால் பேட்ஸ்மென்களுக்கு ரன் அவுட் ஆனால் மட்டும் அடக்க முடியாத கோபம் வரும். கேட்ச் மற்றும் போல்ட் போன்றவைகளால் ஏற்படும் விக்கெட்டை, தனது தவறினால் ஏற்பட்ட விக்கெட் என பேட்ஸ்மென்கள் மனதை தேத்திக்கொண்டு வெளியேறுவார்கள்.
ஆனால் ரன் அவுட் என்பது தனக்கு ஜோடியாக எதிர்முனையில் விளையாடும் வீரரால் தான் ஏற்படும். தான் எந்த தவறும் செய்யாமல் அவுட் ஆகி வெளியேறுவதை நினைத்து சற்று அதிகமாக கோபப்படுவார்கள். இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை ரன் அவுட் ஆன வீரர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ரிக்கி பாண்டிங் ( 80 முறை ரன் அவுட் )
இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங். முந்தைய காலத்தில் இருந்து தற்போது வரை ஆஸ்திரேலிய அணி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்தில் வருபவர் ரிக்கி பாண்டிங் தான். இந்திய அணியில் சச்சின் எப்படியோ, அதே போல்தான் ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் பிரபலமானவர். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய காலத்தில், ரிக்கி பாண்டிங்கும் அவருக்கு நிகராக பல சாதனைகளை படைத்து வந்தார். தற்போது அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று, ஆஸ்திரேலிய அணிக்கு ஆலோசனைகளை வழங்கும் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். இவர் இதுவரை 560 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 80 முறை ரன் அவுட் ஆகி, இந்த மோசமான சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
#2) ஜெய சூர்யா ( 63 முறை ரன் அவுட் )

ஜெயசூர்யா இலங்கை அணியின் ஜாம்பவான்களில் ஒருவர். கங்குலி, சச்சின், சேவாக், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, போன்ற முன்னாள் ஜாம்பவான்கள் விளையாடிய காலத்தில் இவரும் விளையாடிய ஒரு வீரர் தான். தற்போதைய சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிரடிக்கு பெயர் போன பல வீரர்கள் உள்ளனர். ஆனால் முந்தைய கிரிக்கெட்டில் அதிரடிக்கு ஒரு சில வீரர்கள் தான் இருந்தனர். இந்திய அணியில் சேவாக், ஆஸ்திரேலிய அணியில் கில் கிறிஸ்ட், என ஒவ்வொரு அணிக்கும் ஒரு சில வீரர்கள் தான் அதிரடிக்கு இருந்தனர். அந்த வரிசையில் இலங்கை அணியின் அதிரடி வீரர் இவர் தான். இவர் இதுவரை மொத்தம் 586 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தம் 63 முறை ரன் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
#3) யுவராஜ் சிங் ( 46 முறை ரன் அவுட் )

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தார் யுவராஜ். அந்த உலக கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியில் தொடர்ந்து தேர்வு செய்யப்படாமல் இருக்கிறார்.
தனது திறமையை நிரூபித்து ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தற்போது இருக்கிறார். ஏனெனில் சிறப்பாக விளையாடினால் மட்டும்தான், இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புகள் அதிகரிக்கும். இவர் இதுவரை 371 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் மொத்தம் 46 முறை ரன் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.