சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால் அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடரானது, மே மாதத்தின் இறுதியில் இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட உள்ளது.
அனைத்து அணிகளும் இந்த உலக கோப்பை தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அனைத்து அணிகளிலுமே தலைசிறந்த வீரர்கள் விளையாட உள்ளனர். ஆனால் இந்த உலக கோப்பை தொடரில் மிக வலுவான அணியாக, இங்கிலாந்து அணி கருதப்படுகிறது. அவ்வாறு கருதப்படுவதற்கான காரணங்களைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
#1) வலுவான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த ஆண்டு ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் வெறும் 2 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கின்றனர். ஆனால் அந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ராய் இரண்டு போட்டிகளில் 125 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் இரண்டு போட்டிகளில் 105 ரன்களும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி மூன்றாவதாக பேட்டிங் செய்ய களமிறங்கும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், நல்ல பார்மில் உள்ளார். அவர் இந்த ஆண்டு 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி, அதில் 144 ரன்கள் விளாசியுள்ளார். இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் தான் டாப் ஆர்டர், மிக வலுவான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளனர்.
#2) சிறப்பாக விளையாடி வரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்
மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடும் மோர்கன் மற்றும் ஜாஸ்பட்லர், ஆகிய இருவரும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுவும் குறிப்பாக மோர்கன் நல்ல பார்மில் இருக்கிறார். இந்த ஆண்டு மோர்கன் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, அதில் 244 ரன்கள் குவித்துள்ளார். இதில் இவரது பேட்டிங் சராசரி 64.00 ஆகும். பட்லரும் அனைத்து போட்டிகளிலுமே தனது அதிரடியை காட்டி வருகிறார். இந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் அதிக சராசரி வைத்துள்ள ஒரே வீரர் இவர் தான். இவர் இந்த வருடம் நான்கு போட்டிகளில் விளையாடி, அதில் 211 ரன்களை குவித்துள்ளார். இதில் இவரது பேட்டிங் சராசரி 70.33 ஆகும்.
#3) சிறப்பான ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்கள்
ஆல்ரவுண்டர்கள் வரிசையில் பென் ஸ்டோக்ஸ் மட்டும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும், பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி மோயின் அலி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில், மோயின் அலி ஐந்தாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழலில் அடில் ரஷித் அசத்துகிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் தலைசிறந்த வீரர்கள் உள்ளதால், உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி மிக வலுவான அணியாக கருதப்படுகிறது.