தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரண்டு அணிகளும் தலைசிறந்த அணிகளாக திகழ்ந்து வருகின்றனர். அதுவும் குறிப்பாக இங்கிலாந்து அணி, தற்போது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில், இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி உலக கோப்பையை கைப்பற்றியது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நமது இந்திய அணி சிறப்பாக விளையாடி உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது. ஆனால் நியூசிலாந்து அணியிடம், இந்திய அணி அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது. அதன் பின்பு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை, இங்கிலாந்து அணி வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது. இவ்வாறு தலை சிறந்த அணியாக திகழும் இங்கிலாந்து அணிக்கு எதிராக, அதிக ரன்கள் அடித்த நமது இந்திய வீரர் யார் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
#1) மகேந்திர சிங் தோனி ( 1546 ரன்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியின் முன்னாள் கேப்டன், மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், தோனி என்றாலே அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. போட்டியின் இக்கட்டான சூழ்நிலையிலும், அந்த சூழ்நிலையை பொறுமையாக கையாளக்கூடியதில் வல்லவர். இவர் சிறந்த கேப்டன் மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பர் பணியிலும் பல சாதனைகளை படைத்துள்ளார். மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யக்கூடியதில் வல்லவர். இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், மிடில் ஆர்டரில் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி பல போட்டிகளில் இந்திய அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கூட, இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுது, மகேந்திர சிங் தோனி இறுதிவரை இந்திய அணியின் வெற்றிக்கு போராடினார். இதனால்தான் இவர் பல ரசிகர்களை தன் வசம் கவர்ந்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இதுவரை மொத்தம் 48 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 1546 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 1 சதமும், 10 அரை சதமும் அடங்கும்.
#2) யுவராஜ் சிங் ( 1523 ரன்கள் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர், நமது இந்திய அணியில் அதிரடிக்கு பெயர் போன யுவராஜ் சிங். இங்கிலாந்து அணி எந்த வீரரை வேண்டுமானாலும் மறந்திருக்கலாம். ஆனால் யுவராஜ் சிங்கை மட்டும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தான், யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் விளாசி உலக சாதனை படைத்தார். இவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. எனவே சமீபத்தில் தான் தனது ஓய்வை அறிவித்தார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக மொத்தம் 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் மொத்தம் 1523 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 4 சதமும், 7 அரை சதமும் அடங்கும்.