அதிரடிக்கு பெயர் போன தொடர் என்றால், அது ஐபிஎல் தொடர் தான். இந்த ஐபிஎல் தொடரானது கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 11 வருடமாக, நமது இந்தியாவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மிக முக்கியமான அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஒன்று. இதுவரை மொத்தம் மூன்று முறை ஐபிஎல் கோப்பையை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலை சிறந்த அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணம், சென்னை அணியில் விளையாடிய முக்கிய பேட்ஸ்மேன்கள் தான். அதில் ஒரு சில பேட்ஸ்மேன்கள் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் அடித்துள்ளனர். அவர்களைப் பற்றி இங்கு காண்போம்.
#1) முரளி விஜய் ( 11 சிக்சர்கள் )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய, முரளி விஜய். இந்த வருடமும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தான் இவர் விளையாடி வருகிறார். ஆனால் இவருக்கு விளையாட வாய்ப்புகள் கொடுக்கவில்லை. இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது.
எனவே இனிவரும் லீக் போட்டிகளில் முரளி விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், சென்னை அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. அந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி வெளுத்து வாங்கிய முரளி விஜய், 127 ரன்கள் விளாசினார். அதில் 11 சிக்சர்கள் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) மைக்கேல் ஹசி ( 9 சிக்சர்கள் )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஒரு காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த, மைக்கேல் ஹசி. ஆனால் தற்போது இவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், சென்னை அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மைக்கேல் ஹசி, 54 பந்துகளில் 116 ரன்கள் விளாசினார். அதில் 9 சிக்சர்களும் அடங்கும். இவரது அதிரடியால் இந்த போட்டியில் சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 240 ரன்கள் குவித்தது. அதுமட்டுமின்றி இந்த போட்டியில் சென்னை அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
#3) பிரண்டன் மெக்கலம் ( 9 சிக்சர்கள் )
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான, பிரண்டன் மெக்கல்லம். 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில், சென்னை அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. இந்தப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பிரண்டன் மெக்கலம், சிக்சர் மழை பொழிந்தார். அவர் 56 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். அதில் 9 சிக்சர்களும் அடங்கும். அதுமட்டுமின்றி இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.