சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி, ஆகிய மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் பேட்ஸ்மேன்களை விட பந்துவீச்சாளர்களுக்கு தான் முக்கியத்துவம் அதிகம்.
ஏனெனில் தங்களது அணி அதிக ரன்கள் அடித்தாலும், குறைவான ரன்கள் அடித்தாலும், அதற்கு ஏற்றவாறு பந்துவீசி எதிரணியை கட்டுப்படுத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும். எனவே பேட்ஸ்மேன்களை விட, பந்து வீச்சாளர்களின் சிறப்பான விளையாட்டு என்பது அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய பல ஜாம்பவான்கள் உள்ளனர். அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டாலும், அவர்கள் படைத்த சாதனைகள் இன்றுவரை கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கிறது. இவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி, அதிகமுறை 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலை இங்கு காண்போம்.
#1) முத்தையா முரளிதரன் ( 22 முறை )
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த ஜாம்பவான்களில் ஒருவரான முத்தையா முரளிதரன். இவர் இலங்கை அணிக்காக 1992 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். இவரது சுழலில் அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறுவார்கள். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 800 விக்கெட்டுகளையும், 22 முறை 10 விக்கெட்டுகளையும், 67 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#2) ஷேன் வார்னே ( 10 முறை )
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த ஷேன் வார்னே. இவரும் பந்து வீச்சில் பல சாதனைகளை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். இவர் மொத்தம் 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 708 விக்கெட்டுகளையும், 10 முறை 10 விக்கெட்டுகளையும், 37 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
#3) ரங்கனா ஹெராத் ( 9 முறை )
இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பவர், இலங்கை அணியின் தலைசிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ரங்கனா ஹெராத். அதுவும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசி, எதிரணி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை கைப்பற்ற கூடிய திறமை படைத்தவர். இவர் மொத்தம் 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 433 விக்கெட்டுகளையும், 9 முறை 10 விக்கெட்டுகளையும், 34 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#3) ரிச்சர்ட் ஹாட்லி ( 9 முறை )
இவர் நியூசிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆவார். ஹாட்லி 1973 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை நியூசிலாந்து அணிக்காக சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இவர் மொத்தம் 86 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 3124 ரன்களையும், 15 அரை சதங்களையும், 2 சதங்களையும் விளாசியுள்ளார். அதுமட்டுமின்றி பந்துவீச்சில் 431 விக்கெட்டுகளையும், 9 முறை 10 விக்கெட்டுகளையும், 36 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் நியூசிலாந்து அணிக்காக ஒரு சர்வதேச டி20 போட்டிகளில் கூட விளையாடியதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#5) அணில் கும்ப்ளே ( 8 முறை )
இந்தப் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் நமது இந்திய அணியை சேர்ந்த அணில் கும்ப்ளே. நமது இந்திய அணியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் இவர்தான். இவர் மொத்தம் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 619 விக்கெட்டுகளையும், 8 முறை 10 விக்கெட்டுகளையும், 35 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.