இந்திய அணியின் இளம் வீரர் விகாரி தனது சிறந்த டெஸ்ட் இன்னிங்சை சமீபத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக ஆடினார். அந்த போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். இத்தகைய உணர்வுபூர்வமான தருணத்தை அவர் தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்தார்.
தற்போது நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆறாவதாக களமிறங்கிய விகாரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 111 ரன்கள் குவித்தார் இதில் 16 பவுண்டரிகள் அடங்கும்.
முதல் டெஸ்டை இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 250 ரன்களுக்கு மேல் குவித்து இருந்தது. ஆட்ட நேர முடிவில் விகாரி 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இந்திய அணி பண்ட் மற்றும் ஜடேஜா விக்கெட்டுகளை இழந்தது இருப்பினும் இஷாந்த் சர்மாவுடன் இணைந்து இந்திய அணி 400 ரன்கள் கடக்க உதவி செய்தார்.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பத்திரிக்கையாளர்களின் சந்திப்பின்போது அவர் கூறியதாவது
" என்னுடைய பன்னிரண்டாவது வயதிலேயே நான் என் தந்தையை இழந்தேன். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் நான் அடிக்கும் முதல் சதத்தை என் தந்தைக்காக அர்ப்பணிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்த ஒரு தருணம் இன்று நடைபெற்றது. அவர் எங்கிருந்தாலும் இதனை ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன் ."
இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய விகாரி அரை சதத்தை பூர்த்தி செய்தார் இதன்மூலம் தொடர்ந்து 3 முறை 50 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 வயதே நிரம்பிய விகாரி இங்கிலாந்து எதிராக ஆடிய தனது முதல் டெஸ்டில் அரைச்சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் குறிப்பிட்டு சொல்லும்படி எந்த ஒரு இன்னிங்சில் அவர் விளையாடவில்லை.
இந்தநிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மறுபடியும் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வாய்ப்பினை அவர் தனது இரு கரங்களால் பற்றிக் கொண்டார் என்றேன் சொல்ல வேண்டும். முதல் டெஸ்டில் அவர் சதம் அடிக்க பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால் அதனை அவர் 7 ரன்கள் வித்தியாசத்தில் தவறவிட்டார். இருப்பினும் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இந்தத் தொடரில் மொத்தம் 390 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்த தொடர் அவருக்கு மேலும் தன்னம்பிக்கை கூட்டி வருகின்ற தொடரில் சிறப்பாக விளையாட உறுதுணை புரியும். இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ரோகித் சர்மாவை அணியில் சேர்க்க வேண்டுமென்றால் இந்திய அணி விகாரியை ஓபனிங் அனுப்பவேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் ஆடுவது அவருக்கு புதிதல்ல இதற்கு முன்பு 2 முறை அவர் செய்துள்ளார். தொடர்ந்து கேஎல் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இந்திய அணி விகாரியை ஓபனிங் அனுப்ப பிரகாசமான வாய்ப்புள்ளது.