கிரிக்கெட் என்பது பதினொரு பேர் விளையாடக்கூடிய குழு விளையாட்டு தான். ஆனால் இதில் பேட்ஸ்மேன்களை காட்டிலும் பந்து வீச்சாளர்களுக்கே அதிக வேலை பளு இருக்கிறது. குறிப்பாக ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் மற்றும் பீல்டிங் செய்வார் , அவர்களில் ஒரு சிலரே அவ்வப்போது பந்துவீசுவார்கள், அதுவும் சுழற்பந்து வீச்சாகத் தான் இருக்கும். அதுவே பந்துவீச்சாளர் என்பவர் பந்து வீச வேண்டும், பீல்டிங் செய்ய வேண்டும், குறிப்பாக அணி தடுமாறும்போது பேட்டிங் செய்தாக வேண்டும். அதிலும் டெஸ்ட் போட்டிகளில் அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
மேற்கு இந்திய தீவின் ஆதிக்கம்:
கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க காலத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி மிகப்பெரும் பலம் பொருந்தியஅணியாகக் காட்சியளித்தது. அந்த அணியை வீழ்த்த மற்ற அணிகள் மிகவும் சிரமப்பட்டன. அதனால் அந்த அணி இரண்டு உலக கோப்பையைக் கைப்பற்றி வீருநடைபோட்டது, மூன்றாவது முறையும் இறுதிபோட்டிக்கு முன்னேறியது, பின்பு இந்திய அணி அவர்களை வீழ்த்தி முற்றுப்புள்ளி வைத்தது.
ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம்:
இவர்களைப் போன்றே ஆஸ்திரேலிய அணி 90கள் தொடங்கி 2007 வரை யாராலும் அசைக்க முடியாத அணியாக விளங்கியது. இந்த அணி எந்த நாட்டிற்கும் சுற்றுப்பயணம் செய்து விளையாடினாலும் முடிவில் அந்த அணியே வெற்றியை நிலைநாட்டும். இதன் காரணமாகவே ஐந்து உலக கோப்பையைக் கைப்பற்றித் தனி முத்திரை பதித்துள்ளது.
இரு அணிகளின் ஒற்றுமை :
இந்த இரு அணிகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்யும் திறமை வாய்ந்த பந்து வீச்சாளர்கள்தான். அவர்களின், பேட்ஸ்மேன்கள் தன் பணியைச் செய்யத் தவறும் பட்சத்தில் இவர்கள் அணியைக் கரையேற்றுவார்கள்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சேன் வார்ன், பிரட்லீ, ஜேசன் கில்லெஸ்பி, ஆன்டி பிக்கல் ஆவார்கள். மெக்ராத் ஒருவரை தவிர அனைவரும் பேட்டிங்கில் முத்திரை பதித்தார்கள்.அதன் காரணமாகவே அவர்கள் பலம் பொருந்திய அணியாக அறியப்பட்டனர்.
இந்திய அணியின் வரலாறு:
இவர்களைப் போன்றே கபில்தேவ் தலைமையிலான அணி காணப்பட்டதால் பலம்பொருந்திய மேற்கு இந்திய தீவுகள் அணியை 1983ல் உலக கோப்பை இறுதி போட்டியில் வீழ்த்த முடிந்தது. மேலும் அப்போது ஆஸ்திரேலியாவில் நடந்த உலக சீரிஸ் கோப்பையைக் கைப்பற்றிக் கெத்துகாட்டியது. அதில் ஆறாவது வீரராகக் களமிறங்கி ஆல்ரவுண்டராக ஜொலித்தார் நம் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி.
இவர்களுக்குப் பின்பு கங்குலி தலைமையிலான இந்திய அணியில் ஜாகிர் கான், ஹர்பஜன் சிங், அனில்கும்ளே , ஜவகல் ஹீநாத், அஜித் அகர்கர் எனப் பேட்டிங் நீண்டதால் 2003ல் உலக கோப்பை இறுதி போட்டிக்கும், அந்தக் காலகட்டத்தில் பல நாடுகளில் டெஸ்ட் தொடர்களிலும் முத்திரை பதித்தது.
தற்போதைய இந்திய அணி:
தற்போதைய இந்திய அணியும் பார்பதற்கு பலம் வாய்ந்த ஒன்றாகவே உள்ளது. ஆனால் பேட்டிங் சொதப்பலால் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் போய்விட்டது. அந்த இரண்டு தொடர்களிலும் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறியதாலயே தோல்வி அடைந்தது. இது மட்டுமில்லாமல் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானித்தானுடன் ட்ரா, மற்றும் இறுதிபோட்டியில் வங்கதேசம் அணிக்கு எதிராகப் போராடி வென்றது எனப் பேட்டிங் சொதப்பலால் ஏற்படும் நெருக்கடி சூழல்கள் ஏராளமாகக் கூறலாம்.
இதனையெல்லாம் கருத்தில் கொண்டே இந்திய அணி நிர்வாகம் பவுலர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளித்து வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. அந்த நிலையை மாற்றவே பும்ரா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இதுமட்டும் இந்திய அணிக்குச் சரியாக அமையும் பட்சத்தில் இந்திய அணியும் எவராலும் அசைக்க முடியாத அணியாக உருவெடுக்கும்.