இரண்டு வீரர்கள் அறிமுகம். இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டி-20 அணி அறிவிப்பு.

mitcel
mitcel

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்றுள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் எஞ்சிய போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் நியூசிலாந்து அணி உள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடருக்கான அணியை நியூசிலாந்து தற்போது அறிவித்துள்ளது.

இரண்டு வீரர்கள் புதுமுகம்.

14 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ள நியூசிலாந்து அணியில் பேட்டிங் ஆல்ரவுண்டர் ‘டேரில் மிட்செல்’ மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ‘பரில் டிக்னெர்’ ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பிடித்துள்ளனர். இதில் ‘டேரில் மிட்செல்’ 3 போட்டிகளுக்கும் இடம் பிடித்துள்ள நிலையில், மற்றொரு வீரர் ‘பரில் டிக்னெர்’ கடைசி டி-20 போட்டிக்கு மட்டும் சக வேகப்பந்து வீச்சாளர் லூகி பெர்குசன்க்கு மாற்றாக இடம் பிடித்துள்ளார்.

அணியை ‘கேன் வில்லியம்சன் வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ‘டிரெண்ட் போல்ட்’-க்கு பணிச்சுமையின் காரணமாக இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

Dickner
Dickner

தற்போதைய ஒருநாள் தொடரில் தொடர்ந்து சொதப்பி வரும் ‘ஹென்ரி நிகோலஸ்’ டி-20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த இலங்கைக்கு எதிரான டி-20 போட்டித் தொடரில் இடம் பெற்றிருந்த விக்கெட் கீப்பர் ‘கிளென் பிலிப்ஸ்’ மற்றும் ‘சேத் ரான்ஸ்’ ஆகியோர் மோசமான ஃபார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த அணி தேர்வு குறித்து நியூசிலாந்து தேர்வுக்குழு உறுப்பினர் ‘கெவின் லார்சன்’ கூறுகையில், “அறிமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ‘டேரில் மிட்செல்’ தற்போது உள்ளூர் போட்டிகளில் அவரின் ‘சென்ட்ரல் டிஸ்டிரிக்ஸ்’ அணிக்காக பேட்டியில் மட்டுமல்லாது பந்துவீச்சிலும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ‘டிக்னெர்’ இறுதிக் கட்டத்திலும் சிறப்பான வேகத்தில் சிறப்பாக பந்து வீச கூடிய திறமை வாய்ந்தவர்” எனக் கூறினார்.

Trent boult
Trent boult

அறிமுக வீரர் மிட்செல் கடந்த வாரம் நடந்த உள்ளூர் டி-20 போட்டியில் 23 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். மேலும் ஆல் ரவுண்டராக கடந்த இலங்கை தொடரில் அசத்திய ‘பிரேஸ்வெல்’ மற்றும் ‘குஜிலிஜின்’ ஆகியோர் தங்களது இடத்தை தக்க வைத்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்து அணி விபரம்.

கேன் வில்லிம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், காலின் மன்ரோ, டக் பிரெஸ்வெல், மிட்செல் சான்ட்னர், ரோஸ் டெய்லர், காலின் டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி, டேரில் மிட்செல், லுக்கி பெர்குசன் (முதல் 2 போட்டிகளுக்கு மட்டும்), டிம் செய்ஃபர்ட், இஷ் சோதி, பரில் டிக்னெர் (3ஆம் போட்டிக்கு மட்டும்), ஸ்காட் குஜிலிஜின்.

நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரை மோசமாக இழந்த நிலையில், டி-20 தொடரையாவது வெல்லுமா என்பதே நியூசிலாந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். ஒருநாள் போட்டி தொடர் முடிந்த பிறகு இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.