வங்கதேச அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி நேப்பியர் மைதானத்தில் இன்று துவங்கியது. இதன்படி டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் மொரட்டஷா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
துவக்க வீரர்களான தமீம் இக்பால் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களமிறங்கினர். காயம் காரணமாக அணியின் நட்சத்திர வீரர் சகீப் அல் ஹாசன் விளையாடவில்லை. போட்டி துவங்கி சிறிது நேரத்திலே வங்கதேச அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தமீம் இக்பால் 5 ரன்களில் போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார். பின் அடுத்த சில ஓவரிலேயே லிட்டன் தாஸ் ஒரு ரன்னில் ஹென்றி பந்து வீச்சில் போல்ட் ஆனார்.
அடுத்து களமிறங்கி அதிரடியாக ஆடினார் சவுமியா சர்க்கார். ஆனால் மறுமுனையில் ரஹீம் தடுமாறி வந்தார். ரஹீம், போல்ட் பந்தில் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க , சவுமியா சர்க்காரும் அடுத்த ஓவரிலேயே 30 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த சபீர் ரகுமான் மற்றும் முகமதுல்லா 13 ரன்களில் வெளியேற பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிவந்த மிதுன் அரைசதத்தை கடந்தார். ஷாய்ப் மிதுன் 41 ரன்களும் குவித்து ஆட்டமிழக்க இறுதியில் வங்கதேச அணி 231 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. போல்ட் மற்றும் சாண்ட்னர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது நியூசிலாந்து அணி. துவக்க வீரர்களான கப்தில் மற்றும் நிக்கோலஸ் வங்கதேச அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிதறடித்தனர். அரைசதத்தை கடந்த நிக்கோலஸ் 53 ரன்களில் மெஹதி ஹாசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் முகமதுல்லா பந்தில் வெளியேறினார்.
பின் ஜோடி சேர்ந்த கப்தில் மற்றும் டெய்லர் ஜோடி அணியை எளிதில் வெற்றி பெற வைத்தது. இருவரும் வங்கதேச அணியின் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி அசத்தினர். அதிரடியாக ஆடிய கப்தில் சதமடித்தார். இறுதியில் நியூசிலாந்து அணி 44.3 ஓவர்களில் இலக்கை கடந்தது. டெய்லர் 45 ரன்களுடனும் கப்தில் 117 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.வங்கதேச அணி சார்பில் முகமதுல்லா மற்றும் மெஹதி ஹாசன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
அதிரடியாக ஆடிய கப்தில் ஆட்ட நாயகன் விருதினைப் பெற்றார்.
தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் மொரட்டஷா கூறுகையில், "எங்கள் அணிக்கு இது மிகவும் கடினமான ஆட்டம். போட்டியின் துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை இழந்து விட்டோம். மிதுன் சிறப்பாக ஆடினார். நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். 232 ரன்களை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். அடுத்த போட்டியில் சிறப்பாக செயல்படுவோம்" எனக் கூறினார்.