வங்கதேச அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்தப் போட்டியில் முதலில் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் தாஸ் களமிறங்கினர். தொடக்கத்திலேயே இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகி வெளியேறினார். சர்க்கார் மற்றும் ரஹீம் ஆகிய இருவரும் சிறிது நேரம் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். பின்பு இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பின்பு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சபீர் மற்றும் மிதுன் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினர். மிதுன் அரை சதம் விளாசி 57 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். நிலைத்து நின்று விளையாடிய சபீர் 40 ரன்களுக்கும் மேல் குவித்தார். இறுதியில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 226 ரன்கள் அடித்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி. வழக்கம்போல் தொடக்கத்திலிருந்தே அதிரடியை தொடங்கினார் மார்டின் கப்டில். இவர் அதிரடியாய் விளையாடி சதத்தை விளாசினார். இவர் 4 சிக்சர்களையும், 14 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் தொடக்க ஜோடியாக களமிறங்கிய நிக்கோலஸ் 14 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன்பின்பு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் போட்டி முடியும் வரை நிலைத்து நின்று விளையாடினர். சிறப்பாக விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அரை சதம் விளாசினார். இறுதியில் நியூசிலாந்து அணி இந்த இலக்கை 36 ஓவர்களில் எளிதாக அடித்துவிட்டது. இறுதிவரை கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் ஆட்டமிழக்காமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டியிலும் சதம் விளாசிய மார்டின் கப்தில், இந்த போட்டியில் சதம் விளாசினார். எனவே இந்தப் போட்டியிலும் ஆட்டநாயகன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. வங்கதேச அணியின் சார்பில் ரஹ்மான் மட்டும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று, இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. எனவே நியூசிலாந்து அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி விட்டது. இந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற பிப்ரவரி மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஒருநாள் தொடர் முடிந்தவுடன், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.