இந்தியா மகளிர் மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டி இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து மகளிர் அணி இந்த போட்டியையும் வென்று இந்தியாவுக்கு ‘ஒயிட் வாஷ்’ தோல்வியை உருவாக்கும் உத்வேகத்துடன் களமிறங்கியது. அதே நேரத்தில் இந்தப் போட்டியை வென்று தொடரை சிறப்பாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய மகளிர் அணியும் களமிறங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த நியூசிலாந்து மகளிர் அணிக்கு ‘சுசி பேட்ஸ்’ மற்றும் ‘சோஃபி டெவின்’ சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்த நிலையில் சுசி பேட்ஸ் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையான சோஃபி டெவின், கேப்டன் ‘சாதேர்வேட்’டுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரை சதத்தை கடந்தும் சோஃபி டெவின் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சோஃபி டெவின் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ‘மான்சி ஜோஷி’ பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாதேர்வேட் 31 ரன்கள் எடுத்து ராதா யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 162 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி பேட்டிங்கை தொடங்கியது. வழக்கம்போல தொடக்க வீராங்கனை ‘பிரியா பூனியா’ 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் நட்சத்திர வீராங்கனை ‘ஸ்மிரிதி மந்தனா’ நியூசிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளி ரன்கள் சேர்த்தார். அவருக்கு பக்கபலமாக ‘ஜெமினா ரோடிரிக்கஸ்’ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ரோடிரிக்கஸ் 21 ரன்களில் பின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் இந்திய அணியின் நம்பிக்கையாக திகழ்ந்த மந்தனா தனது அரைசதத்தை கடந்து தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுதினார். சதத்தை நெருங்கிய மந்தனா 62 பந்துகளில் 86 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக இந்த தொடரில் முதல் முறையாக ஆடும் வாய்ப்பைப் பெற்ற இந்திய மகளிர் அணியின் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் களமிறங்கினார். மிதாலி ராஜ் - தீப்தி ஷர்மா ஜோடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். கடைசி ஓவரில் அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. நியூசிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ‘காஸ்பர்க்’ வீசிய அந்த ஓவரில் இந்த ஜோடியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
முடிவில் நியூசிலாந்து மகளிர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோஃபி டெவின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் டி-20 தொடரில் நியூசிலாந்து மகளிர் அணி 3-0 என கைப்பற்றி, முன்பு நடந்த ஒருநாள் போட்டி தொடர் இழப்பிற்கு இந்திய அணியை பழி தீர்த்தது.
‘ஆட்ட நாயகி’ மற்றும் ‘தொடர் நாயகி’ ஆகிய இரண்டு விருதுகளையும் இந்த தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்திய ‘சோஃபி டெவின்’ பெற்றார்.
செய்தி : விவேக் இராமச்சந்திரன்.