இன்று நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதன் மூலம் இந்தியாவின் கடந்த 2 ½ வருட சாதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.
இந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முண்ரோ மற்றும் செய்ஃபர்ட் அதிரடியாக விளையாடினர். சிறப்பாக விளையாடிய முண்ரோ 2 சிக்சர்களை விளாசினார். பின்பு 34 ரன்களில் பாண்டியா ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் செய்ஃபர்ட் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக விளையாடிய செய்ஃபர்ட் அரை சதம் விளாசினார்.
சிறப்பாக விளையாடிய இவர் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசி அவுட்டாகி வெளியேறினார். இவர் 6 சிக்சர்களையும், 7 பவுண்டரிகளையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு கேப்டன் கேன் வில்லியம்சன் 34 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் வந்து அதிரடி காட்டிய குகலீன் வெறும் 7 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.
220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒரு ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன்பின்பு தவான் அதிரடியாக 3 சிக்சர்களை விளாசினார். பின்பு இவரும் 29 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். விராட் கோலியின் இடத்தில் களம் இறங்கிய தமிழக வீரர் விஜய் சங்கரும் சிறப்பாக விளையாடி 27 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடிய தவறினர். குறுகிய இடைவெளியில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். இறுதியில் தோனி மட்டும் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்களை அடித்தார். இந்திய அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மிகச் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான செய்ஃபர்ட்- க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணியின் 2 ½ வருட சாதனை முடிவுக்கு வந்தது. கடந்த 2 ½ வருடமாக இந்திய அணி டி-20 போட்டிகளில் எந்த அணியையும் 200 ரன்களுக்கு மேலாக அடிக்க விட்டதில்லை. கடைசியாக 2016 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 245 ரன்களை விட்டுக் கொடுத்தது. ஆனால் தற்போது நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 200-க்கும் மேலான ரன்களை குவித்து இந்தியாவின் இந்த சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.