பாகிஸ்தான் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு அணிகளுடன் களம் கண்டு வருகிறது. குறிப்பாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிய கோப்பையில் இந்தியாவை சந்தித்தது பாகிஸ்தான். ஆடிய இரண்டு போட்டிகளிலுமே தோல்வியுற்றது பாகிஸ்தான். மேலும் அத்தொடரின் சூப்பர்4 சுற்றில் வெளியேறியது.
அதன்பின்பு ஐக்கிய அமீரகத்தில் ஆஸ்திரேலியாவுடன் களம் கண்டது பாகிஸ்தான். 2 டெஸ்ட் 3 டி20 போட்டிகள் கொண்ட அத்தொடரில் பாகிஸ்தான் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி அடைய, மற்றொரு டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது. பின்னர் நடந்த அனைத்து டி20 போட்டிகளிலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டியில் களம் கண்டதே இல்லை என்ற இருந்த நிலையில், பாகிஸ்தானுடன் மோத ஐக்கிய அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளை இந்த தொடர் கொண்டுள்ளது. முதலில் நடந்த 3 டி20 போட்டிகளிலுமே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. அதன் பின் நடந்த ஒரு நாள் தொடரில் பாகிஸ்தான் நியூசிலாந்து தலா ஒரு போட்டியில் வெற்றி கண்டன. மூன்றாவது போட்டி மழையால் ரத்தானது.
ஐக்கிய அமீரகத்தில் 34 வருடங்களுக்கு பின் மழையால் ரத்தான முதல் போட்டியாக இது அமைந்தது. எனவே தொடரை கணிக்கும் மூன்றாவது போட்டி ரத்தானதால் ஒருநாள் தொடர் சமனில் முடிந்தது.
இதற்கிடையே டெஸ்ட் போட்டிகளில் சந்திக்க இரு அணிகளும் ஆயத்தமான நிலையில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கியது.
அபுதாபியில் நடந்த இப்போட்டியில் நியூசிலாந்து டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்ப, கேப்டன் கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி அரைசதத்தை எட்டினார். பின்பு இவரும் அவுட்டான நிலையில் அதன் பின் வந்தவர்கள் ரன் எடுக்க தவறினர். எனவே 153 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது நியூசிலாந்து. யாசிர் ஷா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்களை எடுத்திருந்தார்.பின்பு களமிறங்கிய பாகிஸ்தான் அணி சற்று நிதானமாகவே ஆடியது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அணியின் ஸ்கோரை சிறுது சிறுதாக ஏற்றினர். அதிகபட்சமாக பாபர் ஆசம் 63 ரன்கள் எடுத்திருந்தார். பின்பு போல்ட்டின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய பாகிஸ்தான் அணி லோவர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 227 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர். ட்ரெண்ட் போல்ட் அதிகபட்சமாக 4 விக்கெட்களை எடுத்திருந்தார்.
பின்பு இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது நியூசிலாந்து அணி. கடந்த இன்னிங்சை போல் இல்லாமல் சுதாரித்துக் கொண்டு 249 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் ஹஸன் அலி மற்றும் யாசிர் ஷா பங்கு போட்டுக்கொண்டனர்( தலா 5 விக்கெட்டுகள்).
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என தனது இரண்டாவது இன்னிங்சை இன்று தொடங்கிய பாகிஸ்தான் அணி வழக்கம்போல சொதப்ப ஆரம்பித்தது. முன்னிலை ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடி இருந்தாலும், அதற்கு பின்பு வந்த பேட்ஸ்மேன்கள் பந்தை எதிர்கொள்ள திணறியதால் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான். நியூசிலாந்தின் அறிமுக வீரர் அஜாஸ் படேல் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஐந்து வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் உயிரோடு இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.