நியூசிலாந்தின் ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரில் உள்ள மிகப்பெரிய மசூதி ஒன்றில் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகலில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருந்து வங்காளதேச வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த நிகழ்வு நியூசிலாந்து அரசிற்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஒருநாள் போட்டித் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் எஞ்சியுள்ள கடைசி டெஸ்ட் போட்டி ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரில் நாளை நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரின் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி ஒன்று உள்ளது. 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு நண்பகல் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்துள்ளார்.
கண்மூடித்தனமாக நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும் 6 பேர் மரணமடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அங்கு தொழுகையில் ஈடுபடுவதற்காக சென்ற வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெறும் பொழுது விரைவாக வெளியேறி தப்பித்துள்ளனர்.
வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக வங்காளதேச கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், நியூசிலாந்து மற்றும் வங்காள தேச வீரர்கள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக, நலமாக உள்ளனர். மேலும் இரு நாடுகளின் ஒருமித்த முடிவாக அடுத்து ‘கிறிஸ்ட்சர்ச்’ நகரில் நடைபெற இருந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் அணியின் செய்தி தொடர்பாளர் ‘ஜலால் யூனிஸ்’ கூறுகையில், “நாங்கள் இந்த மசூதிக்கு நண்பகல் தொழுகை நடத்துவதற்காக சொகுசுப் பேருந்தில் வந்திறங்கினோம். மசூதி வளாகத்தில் நுழைந்த போதே இந்த துப்பாக்கி சூடு நடந்ததால் நாங்கள் அங்கிருந்து உடனடியாக ஓடி உயிர் தப்பினோம். வீரர்கள் அனைவருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை ஆனால் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்”. இவ்வாறு யூனிஸ் கூறினார்.
இந்த தாக்குதல் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ‘ஜாசின்டா ஆர்டன்’ அளித்துள்ள பேட்டியில், “இதற்கு முன்பாக இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நியூசிலாந்தில் நிகழ்ந்ததில்லை. இதை செய்தவர்கள் திட்டமிட்டே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். நியூசிலாந்தின் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாளாகும். இதுபோன்ற மோசமான சம்பவங்களுக்கு நியூசிலாந்தில் இனி இடமில்லை” என தெரிவித்தார்.
மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்தானதை அடுத்து இந்த டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என கைப்பற்றியது. முன்னதாக நடந்த ஒருநாள் தொடரையும் நியூசிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.