நியூசிலாந்து மற்றும் இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி நியூஸி.யில் உள்ள ‘பே ஓவல்’ மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற நியூஸி. கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக ‘மார்டின் கப்தில்’ மற்றும் ‘கோலின் முன்ரோ’ களமிறங்கினர். முன்ரோ 13 ரன்களில் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் ‘வில்லியம்சன்’, கப்தில் உடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து இலங்கை பந்துவீச்சை நொறுக்கிய இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. வில்லியம்சன் 76 ரன்கள் எடுத்த நிலையில் பிரதீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தனது 14வது சதத்தை எட்டிய கப்தில் 139 பந்துகளில் 138 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முன்னதாக ‘மார்டின் கப்தில்’ ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த 5வது நியூசிலாந்து வீரர் என்ற சிறப்பை பெற்றார்.
பின்னர் ரோஸ் டெய்லர் உடன் கைகோர்த்த ஜேம்ஸ் நீஷிம் அதிரடியில் பட்டையைக் கிளப்பினார். திசாரா பெரேரா வீசிய ஒரு ஓவரில் 5 சிக்சர்களுடன் 34 ரன்கள் சேர்த்து அசத்தினார். ரோஸ் டெய்லர் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, நீஷிம் 13 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 47 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹென்ரி நிகோலஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். முடிவில் நியூசிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் சேர்த்தது.
இலங்கை தரப்பில் மலிங்கா, பிரதீப், பெரேரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை ஆட்டத்தைத் துவங்கியது.
துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ‘திக்வெல்லா’ மற்றும் ‘குணதிலக்கா’ அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ‘குணதிலக்கா’ 43 ரன்கள் சேர்த்தும், ‘திக்வெல்லா’ 50 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்த நிலையிலும் நீஷிம் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ஆனால் தொடக்க வீரர்கள் ஏற்படுத்திக் கொடுத்த நல்ல தொடக்கத்தை அடுத்து வந்த வீரர்கள் பயன்படுத்த தவறினர். அடுத்து களமிறங்கிய ‘குசல் பெரேரா’ ஒரு முனையில் போராடினாலும் மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வீரர் சண்டிமால் 10 ரன்களிலும், குஷல் மென்டிஸ் 18 ரன்களிலும், அதிரடி வீரர் திசர பெரேரா 4 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருநாள் போட்டியில் தனது நான்காவது சதத்தை எட்டிய குசல் பெரேரா 86 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அத்துடன் இலங்கையின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. முடிவில் இலங்கை 49 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
3 விக்கெட்டுக்கு 211 ரன்கள் என்று நல்ல நிலைமையில் இருந்து இலங்கை அணி தனது கடைசி 7 விக்கெட்டை 115 ரன்களுக்கு இழந்தது குறிப்பிடத்தக்கது. நியூசி தரப்பில் நீஷிம் 3 விக்கெட்டுகளும், சோதி, லூக்கி ஃபெர்குசன், போல்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக சதமடித்து அசத்திய நியூசி வீரர் ‘மார்டின் கப்தில்’ தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்படி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற 5ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ளது.
செய்தி : விவேக் ராமச்சந்திரன்.