இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி ‘சாக்ஸன் ஓவல்’ மைதானத்தில் இன்று தொடங்கியது.
இம்முறை டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மலிங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் கப்தில் & காலின் மன்ரோ களமிறங்கினர். கப்தில் 2 ரன்களிலும், மன்ரோ 21 ரன்களிலும் மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழக்க நியூசிலாந்து தடுமாற்ற தொடக்கத்தை கண்டது.
ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் வில்லியம்சன் - டெய்லர் ஜோடி இலங்கை பந்துவீச்சை சிரமமின்றி எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தது. சதக் கூட்டணி அமைத்த இந்த ஜோடி அணியின் ஸ்கோர் 147 ரன்களாக இருக்கும் போது பிரிந்தது. தனது 35வது ஒருநாள் போட்டி அரைசதத்தை கடந்த வில்லியம்சன் 55 ரன்களில் சண்டக்கன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டெய்லர் உடன் நிக்கோலஸ் இணைந்தார் இந்த ஜோடி இலங்கை பந்துவீச்சை புரட்டி எடுத்து ரன்கள் சேர்த்தது. ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாக 50 ரன்களை கடந்த ரோஸ் டெய்லர் சண்டக்கன் பந்தில் சிங்கிள் எடுத்து தனது 20 ஆவது ஒருநாள் போட்டி சதத்தை எட்டினார்.
அணியின் ஸ்கோர் 300 ரன்களை கடந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த டெய்லர் 136 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4 விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் விரட்டி ரன்கள் சேர்த்த ஹென்ரி நிகோலஸ், மலிங்கா பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை கடந்தார். இவரின் அதிரடியால் நியூசிலாந்து அணி 350 ரன்களை கடந்தது.
முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் சேர்த்தது. நிக்கோலஸ் 124 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இலங்கை அணி தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன் பிறகு 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மற்றுமொரு மகா விரட்டலுக்கு இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க நிலை வீரர்கள் டிக்வெல்லா 46 ரன்கள், தனஞ்செய டி சில்வா 36 ரன்கள், குசால் பெரேரா 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
ஒருமுனையில் ‘திசர பெரேரா’ போராடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தன. திசர பெரேரா 63 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து பெர்குசன் பந்தில் ஆட்டமிழக்க இலங்கையின் தோல்வி உறுதியானது.
முடிவில் இலங்கை அணி 41.4 ஓவர்களில் 249 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசி தரப்பில் பெர்குசன் 4 விக்கெட்டுகளையும், சோதி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 3-0 என தொடரை முழுமையாக வென்று கோப்பையை கைப்பற்றியது.
சதம் அடித்து அணியின் வெற்றிக்கு துணை புரிந்த ‘ரோஸ் டெய்லர்’ ஆட்டநாயகன் விருது பெற்றார்.