இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ‘திசரா பெரேரா’வின் போராட்ட இன்னிங்சை மீறி நியூஸி 21 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2வது ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் ‘பே ஓவல்’ மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
தொடக்கத்தில் தடுமாறிய நியூஸிலாந்து:
நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக காலின் மன்ரோ மற்றும் சென்ற போட்டியின் ‘சத நாயகன்’ மார்டின் கப்தில் களமிறங்கினர். சென்ற போட்டியில் அசத்திய கப்தில் இம்முறை 13 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இருப்பினும் தொடக்க வீரர் மன்ரோ இலங்கை பந்துவீச்சை விளாசித் தள்ளி ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்த ரோஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.
அரை சதத்தை கடந்த மன்ரோ 87 ரன்களில் எதிர்பாராவிதமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்த இணை 3வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
நியூஸிலாந்து ரன்குவிப்பு :
மறுமுனையில் ஹென்ரி நிகோலஸ் இன் துணையுடன் ரோஸ் டெய்லர் ஒருநாள் போட்டிகளில் தனது 45வது அரைசதத்தை கடந்தார். நிக்கோலஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் 90 ரன்களில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இருப்பினும் கடைசி கட்டத்தில் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷிம் மற்றுமொரு அதிரடி இன்னிங்சை வழங்கி 33 பந்துகளில் அரை சதத்தை அடிக்க நியூசிலாந்து அணி 300 ரன்களை கடந்தது. நீஷிம் 37 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க முடிவில் நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 319 ரன்கள் சேர்த்தது.
இலங்கை அணி தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளும் பிரதீப் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் 4 வீரர்கள் ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தடுமாற்றம் :
பிறகு 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை தனது பேட்டிங்கை தொடங்கியது. இலங்கை தொடக்கம் நியூசிலாந்து போலவே அமைந்தது. சென்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய டிக்வெல்லா 9 ரன்களிலும், சென்ற போட்டியில் சதமடித்த குசல் பெரேரா 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா நியூஸி பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் சேர்த்தார்.
நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ‘ஈஷ் சோதி’ இலங்கை பேட்ஸ்மென்களுக்கு குடைச்சல் கொடுக்க விக்கெட்டுகளை இலங்கை இழந்தது. குணதிலகா 71 ரன்களை சேர்த்து ஆட்டம் இழந்தார்.
இருப்பினும் அதிரடி வீரர் திசரா பெரேரா அதிரடியாக விளையாடி இலங்கை அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
நியூசிலாந்து பந்துவீச்சை நொறுக்கி தள்ளி சிக்ஸர் மழை பொழிந்தார் பெரேரா. 127/7 என்ற நிலையிலிருந்து தனிநபராக ஆட்டத்தை மாற்றினார் பெரேரா. நியூசிலாந்து பந்து வீச்சை விளாசித் தள்ளிய இவர் 57 பந்துகளில் தனது முதல் ஒருநாள் போட்டி சதத்தை விளாசினார்.
சதமடித்த பின்னும் சிக்ஸர் மழை பொழிந்த பெரேராவை கட்டுப்படுத்த முடியாமல் நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் திணறினார். இறுதியில் அவர் 74 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து ‘மேட் ஹென்ரி’ன் பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கையின் இன்னிங்க்ஸ் முடிவுக்கு வந்தது.
இதன்மூலம் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என கைப்பற்றியது. நியூசிலாந்து அணி தரப்பில் ‘ஈஷ் சோதி’ 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
தனிநபராக இலங்கையின் வெற்றிக்கு போராடிய திசாரா பெரேரா ‘ஆட்ட நாயகனாக’ தேர்வு செய்யப்பட்டார். அவர் இந்த போட்டியில் 13 சிக்சர்களை விளாசியது குறிப்பிடத்தக்கது.
3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வருகிற 8ம் தேதி நடைபெற உள்ளது.