நியூசிலாந்து அணியுடனான முதல் டி20யில் இந்திய அணியின் உத்தேச XI

Indian Team
Indian Team

இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 வெல்லிங்டனில் பிப்ரவரி 6 அன்று தொடங்க உள்ளது. இந்திய அணி ஏற்கனவே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என தொடரை வென்றுள்ளது. நான்காவது ஒருநாள் போட்டியில் மட்டும் டிரென்ட் போல்ட் அதிரடி பௌலிங்கால் தோல்வியை தழுவியது இந்திய அணி..

இந்த நிலைதான் ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்தது. ஆனால் 18/4 என்ற நிலையில் இருந்த இந்திய அணியை மிடில் ஆர்டர் வீரர்களான ராயுடு , விஜய் சங்கர், கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா ஆகயோரது சிறப்பான பேட்டிங்கால் ஒரு நல்ல ஓடிஐ ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. குல்தீப் யாதவ்-ற்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் சகால் சிறப்பாக செயல்பட்டு சில முக்கிய விக்கெட்டுகளை தனது மாயஜால சுழலில் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய அணி நியூசிலாந்தில் 4-1 என தொடரை கைப்பற்றியதால் இதே ஆதிக்கத்தை டி20 தொடரிலும் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தற்போது விராட் கோலி இல்லை. எனினும் நிறைய சிறப்பான பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பௌலிங்கை சமாளிக்கும் வகையில் இந்திய அணியில் உள்ளனர்.

நாம் இங்கு நியூசிலாந்து உடனான முதல் டி20யில் இந்திய அணியில் இடம்பெற உள்ள உத்தேச பதினொரு வீரர்களை பற்றி காண்போம்.

தொடக்க வீரர்கள் : ரோகித் சர்மா (கேப்டன்) மற்றும் ஷிகார் தவான்

Dhawan & Rohit Sharma
Dhawan & Rohit Sharma

மூன்று டி20 போட்டிகளிலுமே ரோகித் மற்றும் தவான் ஆகிய இருவர் தான் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவர். ஒருநாள் தொடரில் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை இருவரும் வெளிபடுத்தினர். கடைசி இரு ஒருநாள் போட்டிகளில் மட்டும் டிரென்ட் போல்ட் மற்றும் மேட் ஹன்றி பௌலிங்கில் தடுமாறினர். இவர்கள் இந்த தடுமாற்றத்திலிருந்து மீண்டு வர வேண்டும் எனபதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாகும்.

விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா டி20 தொடரில் கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது. ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்திறனுடன் அணியை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர். சமீப காலமாக ரோகித் சர்மா டி20யில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். எனவே நியூசிலாந்து உடனான டி20 தொடரிலும் இந்த ஆட்டத்திறன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி20யில் ரோகித் சர்மா-வின் கேப்டன்ஷிப் எப்போதும் சிறப்பாகவே இருக்கும். இதனை நாம் ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தியதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம். வெல்லிங்டனில் இவரது அதிரடி பேட்டிங் இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நியூசிலாந்து உடனான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடி 33.80 சராசரியுடன் 169 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.

ஷிகார் தவான் ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பி வந்தாலும் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இழந்த ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளார். ஆனால் கடைசி இரு ஒருநாள் போட்டியில் மோசமாக சொதப்பியுள்ளார். இவர் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்று 47 சராசரியுடன் 189 ரன்களை குவித்துள்ளார். டி20 தொடரில் இவரது அதிரடி ஆட்டத்தை நாம் நிச்சயமாக காணலாம்.

மிடில் ஆர்டர் : ரிஷப் பன்ட் , எம்.எஸ்.தோனி(விக்கெட் கீப்பர்),கேதார் ஜாதவ்.

Kedar jadhav & MSD
Kedar jadhav & MSD

முதல் டி20 போட்டியில் ரிஷப் பன்ட்-டிற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் சுப்மன் கில்-ற்கு ஆடும் XI ல் வாய்ப்பு கிடைக்காது. சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான போட்டியில் ரிஷப் பன்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி உள்ளார். எனவே அவருக்கு டி20யில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இவரது பேட்டிங் மிகவும் சிறப்பாகவும் , அதிரடியாகவும் உள்ளது.

சுப்மன் கில் ஒரு சிறந்த இளம் பேட்ஸ்மேன். ஆனால் அவர் ஒருநாள் தொடரில் தனக்கு அளிக்கப்பட்ட இரு வாய்ப்புகளிலும் சொதப்பியுள்ளார். எனவே ரிஷப் பன்ட்-டை டி20யில் நம்பர்-3 பேட்ஸ்மேனாக களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பன்ட் நம்பர்-3யில் நன்றாக விளையாடும் திறமை உடையவர் ஆவார். நன்றாக நிலைத்து விளையாடினால் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தும் திறமை கொண்டவராக ரிஷப் பன்ட் உள்ளார்.

எம்.எஸ்.தோனி ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதே ஆட்டத்திறனை நியூசிலாந்து ஒருநாள் தொடரிலும் செயல்படுத்தினார். காயம் காரணமாக 3வது மற்றும் 4வது ஒருநாள் போட்டியில் இவர் இடம்பெறவில்லை. ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் டிரென்ட் போல்ட் வேகத்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

தோனி டி20 ஆட்டத்திறனை இழந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இவரது அதிரடி பேட்டிங்கை பார்க்கும் போது இதெல்லாம் வதந்தி என அனைவருக்கும் தெரியபடுத்தினார். தோனி மற்றும் கோலி இல்லாத இந்திய அணியை சிறிது கூட நினைத்து பார்க்க இயலவில்லை. தோனி , கேப்டன் ரோகித் சர்மா-விற்கு தனது கேப்டன்ஷிப் அனுபவத்திலிருந்து சில அறிவுரைகளை வழங்குவார்.அத்துடன் இந்திய அணியில் ஒரு சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் செயல்படுவார்.

கேதார் ஜாதவ் கடைசியாக சர்வதேச டி20யில் அக்டோபர் 2017ல் விளையாடினார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தியதால் இந்திய டி20 அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். கேதார் ஜாதவ் நியூசிலாந்து உடனான டி20 தொடரில் தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேதார் ஜாதவ் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தேர்ந்தவராக உள்ளார். அத்துடன் தனது அதிரடி பேட்டிங்கால் மிடில் ஆர்டரில் ரன்களை குவிக்கும் திறமை பெற்றவராகவும் விளங்குகிறார். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உடனான இந்திய அணியின் கடைசி இரு ஒருநாள் தொடரிலும் கேதார் ஜாதவ் சிறப்பாக தனது ஆட்டத்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே கேதார் ஜாதவ் டி20 அணியில் விளையாட முழு தகுதி உடையவர் ஆவார்.

ஆல்-ரவுண்டர்கள் : விஜய் சங்கர் மற்றும் ஹர்திக் பாண்டியா

Hardik Pandya
Hardik Pandya

விஜய் சங்கர் நியூசிலாந்து அணியுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மிடில் ஆர்டரில் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக தனது ஆட்டத்திறனை நன்றாக வெளிபடுத்தினார். ஒருநாள் போட்டியில் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு ராயுடுவுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார் விஜய் சங்கர். இவர் 5வது ஒருநாள் போட்டியில் 64 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை அடித்தார். சிறிய தடுமாற்றத்தினால் ரன் அவுட் ஆகி அரை சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

விஜய் சங்கர் இதற்கு முன் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர் பௌலிங்கில் சற்று அதிக ரன்களை அளித்து வந்ததால் அணியிலிருந்து நிக்கப்பட்டார்.

வெல்லிங்டன் டி20 யில் க்ருணல் பாண்டியா-விற்கு பதிலாக விஜய் சங்கருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் ஸ்பின் பௌலிங்கை விட வேகப்பந்து வீச்சு வெல்லிங்டன் மைதானத்தில் சாதகமாக இருக்கும். விஜய் சங்கர் ஒரு பேட்டிங் ஆல்-ரவுண்டர் என்பதால் இவரது பேட்டிங் மற்றும் பௌலிங் டி20யில் இந்திய அணிக்கு தேவை. ஐபிஎல் தொடர்களில் இவரது அதிரடி பேட்டிங்கை நாம் சில போட்டிகளில் வெளிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்திறனுடன் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.5வது ஒருநாள் போட்டியில் 22 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்களை அடித்தார் அத்துடன் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக தன்னை ஹர்திக் பாண்டியா நிருபித்துள்ளார். அத்துடன் இந்திய அணியில் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவும் உள்ளார்.

இந்திய அணி டி20 அணியில் சில சிறப்பான ஆட்டத்திறன் மற்றும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த கூடிய கடைநிலை பேட்டஸ்மேன்களை அதிகம் விரும்புகிறது. ஹர்திக் பாண்டியா இந்த இடத்திற்கு ஒரு சரியான வீரராக இருப்பார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்

ஸ்பின்னர்ஸ் - குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால்

Spin twins Kuldeep-chahal
Spin twins Kuldeep-chahal

சகால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இரு ஸ்பின் இரட்டையர்கள் கண்டிப்பாக இந்திய அணியில் இடம்பெற்றிருப்பர். இரு சுழற்பந்து வீச்சாளர்களும் இந்திய பௌலிங்கில் ஒரு முக்கிய தூணாக இந்திய அணியில் செயல்படுகின்றனர். இவர்களது மாயஜால பௌலிங்கில் எதிரணி பேட்டிங்கை சிதைக்கும் வகையில் இவர்களது சுழற்பந்து வீச்சு அமைந்துள்ளது.

டி20 யில் குல்தீப் யாதவ்-வை விட யுஜ்வேந்திர சகால் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். குல்தீப் யாதவும் தனது பௌலிங் பார்ட்னர் சகால்-ற்கு சமமாக நியூசிலாந்து டி20 தொடரில் செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஏற்கனவே ஒருநாள் தொடரில் குல்தீப் யாதவ் சுழலில் மிகவும் தடுமாறி தங்களது விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் குல்தீப் மற்றும் சகால் பௌலிங் நியூசிலாந்து மைதானங்களில் சரியாக எடுபட்டுள்ளது.எனவே டி20 தொடரிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள் : புவனேஸ்வர் குமார் மற்றும் சித்தார்த் கவுல்

Sidharth kaul
Sidharth kaul

புவனேஸ்வர் குமார் இந்திய டி20 அணியில் ஒரு முக்கியமான வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவருடன் முகமது ஷமி அல்லது பூம்ரா இரண்டாவது பௌளராக செயல்படுவர்.புவனேஸ்வர் குமார் ஆஸ்த்ரெலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் சிறப்பான பந்துவீச்சை வெளிபடுத்தியுள்ளார்.

நியூசிலாந்து உடனான 5 ஒருநாள் போட்டிகளில் நல்ல எகானமி ரேட் உடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.வெல்லிங்டன் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.பவர் பிளே ஓவரில் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் தேவை.

சித்தார்த் கவுல் முதல் டி20யில் கலில் அகமதுவிற்கு பதிலாக இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற வேண்டும். இவர் விளையாடிய 2 சர்வதேச டி20யிலும் சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார். அத்துடன் இந்திய-ஏ அணியிலும் சிறப்பாக அசத்தியுள்ளார்.

கலீல் அகமதுவை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய ஆகிய இரு தொடர்களிலும் வாய்ப்பு அளித்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. எனவே இந்த இடத்திற்கு சித்தார்த் கவுல் சரியாக இருப்பார். அத்துடன் கலீல் அகமதுவை விட சித்தார்த் கவுல்-ற்கு அதிக டி20 அனுபவம் உள்ளது. எனவே சித்தார்த் கவுல்-ற்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

Quick Links