இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என வரலாற்று வெற்றிகளை குவித்த பின் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என நியூசிலாந்து மண்ணில் 10 வருடத்திற்குப் பிறகு தொடரை கைப்பற்றி உள்ளது. விராட் கோலி-யின் தலைமையிலான இந்திய அணி , தனது சொந்த மண்ணில் மிக வலிமையான அணியான நியூசிலாந்தை தவிடு பொடியாக்கியுள்ளது.
இந்த வெற்றி முழுவதும் இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது பணியைத் திறம்படச் செய்ததும் இந்திய தொடரை கைப்பற்றியதற்கான காரணமாகும். இந்திய பௌலர்களும் சரி பேட்ஸ்மேன்களும் சரி சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை நியூசிலாந்து தொடரில் வெளிபடுத்தியுள்ளனர். ஆனால் நியூசிலாந்து அணி இதனை செய்ய தவறிவிட்டது. குறிப்பாக மூன்று ஒருநாள் போட்டியிலும் 50 ஓவர்கள் முழுவதுமாக கூட நியூசிலாந்து அணி வீரர்கள் பேட்டிங் செய்யவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணிக்கு அதிக பிரஸரை ஏற்றினர். கோலி தனது கேப்டன்ஷிப்பை சிறப்பாக செய்து தொடரை கைப்பற்றி விட்டு ஓய்வு எடுக்க கிளம்பி விட்டார்.
கோலியின் தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. விராட் கோலி கேப்டனாக கடந்த வருடத்தில் நடைபெற்ற இங்கிலாந்து ஒருநாள் தொடரை மட்டுமே இழந்துள்ளார்.
2019 உலகக் கோப்பை ஆரம்பிக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் இந்த தொடர் வெற்றிகள் உலகக் கோப்பை வெல்லும் நம்பிக்கையை இந்திய அணிக்கு அளித்துள்ளது என்றே கூறலாம். நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வெல்வது மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் விராட் கோலி-யின் தலைமையிலான இந்திய அணி அதனை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
நாம் இங்கு நியூசிலாந்து தொடரில் இந்திய அணி தொடரை வென்றதற்கான 4 காரணங்களை காண்போம்.
#1. நியூசிலாந்தின் தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தும் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி
இந்திய அணி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றதற்கான மிக முக்கியமான காரணங்களுள் ஒன்று முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் முதல் 10 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்துவதுதான். நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி மார்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அத்துடன் இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.
பே ஓவலில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் 324 ரன்கள் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.முகமது ஷமி நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சனின் விக்கெட்டை வீழ்த்தினார், புவனேஸ்வர் குமார் நியூசிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மார்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 63 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.
பே ஓவலில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் காலின் முன்ரோ விக்கெட்டை முகமது ஷமியும் , மார்டின் கப்தில் விக்கெட்டை புவனேஸ்வர் குமார்-ரும் வீழ்த்தினர்.இந்திய அணி நியூசிலாந்தை முதல் 10 ஓவரில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என கட்டுப்படுத்தினர்.
#2. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை துவம்சம் செய்த குல்தீப் மற்றும் சகால்
நியூசிலாந்திற்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளிலும் குல்தீப் மற்றும் சகால் சுழலில் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் திணறினர். நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் முக்கிய விக்கெட்டுகளான ராஸ் டெய்லர் மற்றும் டாம் லேதம் விக்கெட்டுகளை சகால் வீழ்த்தினார். இப்போட்டியில் சகால் 10 ஓவர்களை வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குல்தீப் யாதவ் , நியூசிலாந்து கேப்டன் கானே வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்திருந்த போது அவரது விக்கெட்டை வீழ்த்தினார் . அத்துடன் நியூசிலாந்து அணியின் கடை நிலை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவர் 10 ஓவர்களை வீசி 39 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து அணியை 157 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்ய மிகவும் உதவியாக இருந்தார்.
குல்தீப் யாதவ்-வின் இந்த மாயாஜால பௌலிங் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தொடர்ந்தது. இந்திய அணி 325 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. கோலி இந்த போட்டியில் சற்று தாமதமாகதான் இவரை பந்து வீச அழைத்தார். இருப்பினும் ஸ்சோதி, ஹன்றி நிக்கோல்ஸ், காலின் டி கிரான்ட் ஹாம் , டாம் லேதம் போன்ற விக்கெட்டுகளை குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.
மூன்றாவது ஒருநாள் போட்டியில் சகால் , கானே வில்லியம்சன் மற்றும் நிலைத்து விளையாடிய டாம் லேதம் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் சிறப்பான பௌலிங் திறனை பெற்ற வீரர்களாக இந்திய அணியில் திகழ்கின்றனர். இவர்கள் இருவர் மட்டும் சேர்ந்து 26 ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
#3. ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவானின் அதிரடி தொட்க்க பேட்டிங்
ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் தற்போது ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் ஆவர் . நேப்பியரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 11 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் ஷிகார் தவான் நிலைத்து விளையாடி 75 ரன்களை குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் .
இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி. ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா இனைந்து 154 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்தனர் . ரோகித் சர்மா 87 ரன்களையும் ஷிகார் தவான் 66 ரன்களையும் விளாசினர் . இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் அற்புதமான பார்ட்னர் ஷிப்பால் நியூசிலாந்து அணிக்கு 324 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது . ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
பே ஓவலில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 244 ரன்கள் நியூசிலாந்து அணி நிர்ணயித்தது . இப்போட்டியில் ரோகித்- தவான் பார்ட்னர் ஷிப்பில் இந்திய அணிக்கு 39 ரன்கள் வந்தது . ரோகித் சர்மா 62 ரன்களை அடித்தார். தொடக்க முதலே அதிரடியாக ஆடிய தவான் 29 ரன்களில் முதல் பவர்பிளே-விலேயே தனது விக்கெட்டை இழந்தார் . கடந்த இரு ஒருநாள் போட்டிகளிலும் ரோகித்-தவான் தங்களது சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளனர்.
#4. விராட் கோலியின் கேப்டன்ஷிப்
நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றதற்கான காரணங்களுள் விராட் கோலி-யின் கேப்டன்ஷிப்பும் முக்கிய காரணமாகும். விராட் கோலியின் சரியான முடிவுகள் மற்றும் பேட்டிங் திறன் இந்திய வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. அத்துடன் வீரர்களின் தேர்வும் சரியாக இருந்தது. தோனியின் தலைமையிலான இந்திய அணி 2009ல் நியூசிலாந்தில் ஒருநாள் தொடரை வென்றது. அதன்பின் கோலியின் தலைமையிலான இந்திய அணி 2019ல் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் விராட் கோலி நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.
விராட் கோலி இரண்டு ரிஸ்ட்- ஸ்பின்னர்களை தேர்வு செய்து முக்கியமான பார்ட்னர் ஷிப்களை எளிதாக முறியடித்தார். அத்துடன் முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் வேகப்பந்து வீச்சில் அசத்தினர். விராட் கோலி 43,45 மற்றும் 60 என முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் குவித்ததால் இந்திய அணி தொடரை கைப்பற்ற எளிதாக அமைந்தது.
விராட் கோலி நியூசிலாந்துடனான மூன்றாவது ஒருநாள் போட்டியோடு அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது . அவர் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரின் போது இந்திய அணியில் இனைவார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த ஓய்வு அடுத்தடுத்து வரும் ஆஸ்திரெலிய தொடர் , ஐபிஎல் , 2019 உலகக் கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்த விராட் கோலி-க்கு ஏதுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.