இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்று 3-1 என தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலால் 91 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி மோசமான தோல்வியை தழுவியது. ஐந்தாவது ஒருநாள் போட்டி வெல்லிங்டன் மைதானத்தில் இன்று ( பிப்ரவரி 3) இந்திய நேரப்படி காலை 7:30 ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்-கிற்கு பதிலாக தோனி களமிறங்கினார். குல்தீப் யாதவ்-விற்கு பதிலாக விஜய் சங்கர் களமிறங்கினார். கலீல் அகமதுவிற்கு பதிலாக முகமது ஷமி களமிறங்கினர். நியூசிலாந்து அணியில் மார்டின் கப்தில்-ற்கு பதிலாக காலின் முன்ரோ களமிறங்கினார்.
ரோகித் சர்மா மற்றும் தவான் தொடக்க ஆட்டக்கார்களாக இந்திய அணியில் களமிறங்கினர். மேட் ஹன்றி முதல் ஓவரை வீசினார். இவருடன் முதல் பவர்பிளே ஓவரில் டிரென்ட் போல்ட் வீசினார். ஆட்டத்தின்முதலே இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மிகவும் நிதானமாக விளையாடினர். 5வது ஓவரில் மேட் ஹன்றி வீசிய பந்தில் , ரோகித் சர்மா 2 ரன்களில் போல்ட ஆனார். பின்னர் அடுத்த ஓவரிலேயே தவான் டிரென்ட் போல்ட் வீசிய பந்தில் மேட் ஹன்றி-யிடம் 6 ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய சுப்மன் கில் நிலைத்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த ஓவரிலேயே மேட் ஹன்றி வீசிய பந்தில் 7 ரன்களில் மிட்செல் சான்ட்னர்-ரிடம் கேட்ச் ஆனார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் நம்பிக்கை நட்சத்திரம் தோனி டிரென்ட் போல்ட் வீசிய 10வது ஓவரில் 1 ரன்களில் போல்ட் ஆனார்.
இந்திய அணி முதல் பவர்பிளே ஓவரில் (1-10 ஓவர்கள்) 4 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய ராயுடு மற்றும் விஜய் சங்கர் பொருப்பான ஆட்டத்திறனை வெளிபடுத்தினர்.19 ஓவர் முடிவில் இந்திய அணிக்கு 50 ரன்கள் வந்தது. சிறப்பாக பார்ட்னர் ஷிப் செய்து விளையாடி வந்த விஜய் சங்கர் 32வது ஓவரில் காலின் முன்ரோவிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 64 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 45 ரன்களை அடித்தார்.விஜய் சங்கர் மற்றும் ராயுடு பார்ட்னர் ஷிப்பில் 98 ரன்கள் வந்தது. பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ் ராயுடுவுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.மேட் ஹன்றி வீசிய 44வது ஓவரின் 2வது பந்தில் ராயுடு , காலின் முன்ரோ-விடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 113 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 90 ரன்களை விளாசினார்.அத்துடன் கேதார் ஜாதவ் மற்றும் ராயுடு பார்ட்னர் ஷிப்பில் 74 ரன்கள் வந்தது. மேட் ஹன்றி வீசிய 46வது ஓவரின் 2வது பந்தில் கேதார் ஜாதவ் போல்ட் ஆனார்.
இவர் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களை அடித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஹர்திக் பாண்டியா டோட் ஆஸ்டல் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸரை விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்திக் பாண்டியா , நிஸாம் வீசிய 49 வது ஓவரின் கடைசி பந்தில் டிரென்ட் போல்ட்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 22 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 45 ரன்களை விளாசித்தள்ளினார்.டிரென்ட் போல்ட் வீசிய 50வது ஓவரின் 4வது பந்தில் புவனேஸ்வர் குமார் 6 ரன்களில் ராஸ் டெய்லர்-டம் கேட்ச் ஆனார். பின்னர் அடுத்த பந்திலேயே முகமது ஷமி இவரிடமே ரன் அவுட் ஆனார்.இவரது விக்கெட்டுடன் இந்திய அணி தனது 10 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 49.5 ஓவர்களை எதிர்கொண்டு 252 ரன்களை அடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி சார்பில் மேட் ஹன்றி 4 விக்கெட்டுகளையும் , டிரென்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும் , நிஸம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
253 என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் காலின் முன்ரோ மற்றும் ஹன்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். புவனேஸ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். அவருடன் முதல் பவர்பிளே-வில் முகமது ஷமி வீசினார். 3.3 வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் ஹன்றி நிக்கோல்ஸ் 8 ரன்களில் கேதார் ஜாதவ்-விடம் கேட்ச் ஆனார். 9.3 வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் 24 ரன்களில் காலின் முன்ரோ போல்ட் ஆனார். நியூசிலாந்து அணி முதல் பவர்பிளே ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் அடித்திருந்தது.
ஹர்திக் பாண்டியா வீசிய 10.3 வது ஓவரில் ராஸ் டெய்லர் 1 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். பின்னர் களமிறங்கிய டாம் லேதம் , கானே வில்லியம்சன் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை மேற்கொண்டார். 22ஓவர் முடிவில் கானே வில்லியம்சன் மற்றும் டாம் லேதம் பங்களிப்பில் 50 ரன்கள் வந்தது. மிகவும் நிதானமாக விளையாடி வந்த கானே வில்லியம்சன் 25.4வது ஓவரில் கேதார் ஜாதவ் வீசிய பந்தில் , தவானிடன் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 73 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 39 ரன்களை எடுத்தார்.28.3 வது ஓவரில் சகால் வீசிய பந்தில் டாம் லேதம் எல்.பி.டபுள்யு ஆனார். இவர் மொத்தமாக 49 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். 30.6வது ஓவரில் சகால் வீசிய சுழலில் காலின் டி கிரான்ட் ஹாம் 11 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.
36.2வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த நிஸாம் தோனியிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 32 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களை அடித்தார். 40.5 வது ஓவரில் சகால் வீசிய பந்தில் , டாட் ஆஸ்டில் 10 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.43.1 வது ஓவரில் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் மிட்செல் சான்ட்னர் 22 ரன்களில் முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார்.44.1 ஓவரில் புவனேஸ்வர் குமார் வீசிய பந்தில் டிரென்ட் போல்ட் 1 ரன்களில் முகமது ஷமி-யிடம் கேட்ச் ஆனார். இந்த விக்கெட்டுடன் நியூசிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து அணி மொத்தமாக 44.1 ஓவர்களை எதிர்கொண்டு 217 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என தொடரை வென்றது. இந்திய அணி சார்பில் சகால் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி , ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ், புவனேஸ்வர் குமார் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி இதுவரை 4 முறை தனது சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.
ராயுடு ஆட்டநாயகன் விருதினை வென்றார். முகமது ஷமி தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.