சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும். இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது மே மாதத்தின் இறுதியில், இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த ஆண்டு உலக கோப்பை தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள், மிக வலுவான அணியாக உள்ளது. எனவே எந்த அணி, இந்த ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு சதம் கூட அடிக்காத பிரபல கிரிக்கெட் வீரர்களை பற்றி இங்கு காண்போம்.
#1) ஷேன் வாட்சன் ( ஆஸ்திரேலிய அணி )
ஆஸ்திரேலியா அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில், ஷேன் வாட்சனும் ஒருவராக இருந்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் குறிப்பாக நமது இந்தியாவில் இவருக்கு என்று தற்போது புது ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. அந்த இறுதிப்போட்டியில் காலில் அடிபட்டு ரத்தம் வந்தும், இறுதிவரை தனி ஒருவராக வாட்சன் போராடினார். இவரது இந்த சிறப்பான ஆட்டம் இணையதளத்தில் வைரலாகியது.
பல கிரிக்கெட் ரசிகர்கள் இணையதளத்தில் இவரை பாராட்டி வந்தனர். அதுமட்டுமின்றி விராட் கோலியும் இவரை டுவிட்டரில் பாராட்டியிருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், ஷேன் வாட்சன். இவர் இதுவரை உலக கோப்பை தொடரில், மொத்தம் 22 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 643 ரன்களை குவித்துள்ளார். உலக கோப்பை தொடரில் இவரது பேட்டிங் சராசரி 53.58 ஆகும். ஆனால் இவர் உலக கோப்பை தொடரில், இதுவரை ஒருமுறைகூட சதம் விளாசியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#2) மைக்கேல் கிளார்க் ( ஆஸ்திரேலிய அணி )
மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தவர். சில வருடங்கள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவன் ஸ்மித், கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டார். ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டதால், கடந்த ஒரு வருடமாக ஆரோன் ஃபின்ச் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
மைக்கேல் கிளார்க், 2007, 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். உலக கோப்பை தொடரில் இவர் மொத்தம் 25 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 888 ரன்களையும் குவித்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் இவரது பேட்டிங் சராசரி 63.42 ஆகும். மேலும் 8 அரை சதங்களும் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த இவர், உலக கோப்பை தொடரில் ஒரு சதம் கூட விளாசியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.