வங்கதேச அணி நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 234 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தமிம் இக்பால் 126 ரன்களை அடித்தார். அதன் பின்னர் விளையாடி நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணியை கதறவிட்டது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் இருவரும் சதம் அடித்து அசத்த, பின்னர் வந்த வில்லியம்சனும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 451 ரன்களை எடுத்திருந்தது.
இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். 93 ரன்னில் களத்தில் இருந்த வில்லியம்சன் இன்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சதம் விளாசினார். அவருடன் இணைந்து விளையாடிய வாக்னெரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்த ஸ்கோர் 500 ரன்களை கடந்தது. இதை தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிபடுத்திய வாக்னெர் 47 ரன்களில் தனது விக்கெட்டை ஹொசைன் பந்தில் இழந்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய வாட்லிங் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தினார். நிலைத்து விளையாடிய வில்லியம்சன் 150 ரன்களை கடந்தார். வாட்லிங் 31 ரன்னில் மெஹென்டி ஹசன் பந்தில் அவுட் ஆகினார். அதை அடுத்து களம் இறங்கிய டி கிராண்டோம் வந்த வேகத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக விளையாடி இவர் அரைசதத்தை கடந்தார். நிலைத்து விளையாடிய கேப்டன் வில்லியம்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இது இவரது இரண்டாவது இரட்டை சதம் ஆகும். அதிரடியாக விளையாடி டி கிராண்டோம் 76 ரன்கள் அடித்த நிலையில் நியூசிலாந்து அணி 715 ரன்களை அடித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. 200 ரன்களை அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார் வில்லியம்சன்.
இதை அடுத்து களம் இறங்கிய வங்கதேச அணியில் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் ஷட்மன் இஸ்லாம் இருவரும் களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் நிலைத்து விளையாடினர். தமிம் இக்பால் முதல் இன்னிங்ஸை போன்று நிலைத்து சிறப்பாக விளையாடினார். ஷட்மன் இஸ்லாம் 37 ரன்னில் வாகனெர் பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த மொமினுள் ஹாக் சிறிது நேரம் நிலைத்து நின்று 8 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து வந்த வேகத்தில் முகமது மிதுன் டக் அவுட் ஆகினார்.
அதை அடுத்து களம் இறங்கிய சவுமிய சர்க்கார் நிலைத்து விளையாட, சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய தமிம் இக்பால் 74 ரன்னில் சௌவுதி பந்தில் அவுட் ஆகினார். பின்னர் வந்த கேப்டன் முகமதுல்லாஹ் நிலைத்து விளையாட மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. இன்னும் 307 ரன்கள் முன்னிலையில் வலுவான நிலையில் உள்ளது நியூசிலாந்து அணி.