ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகப்பெரிய இரண்டு அணிகளுக்கு (சென்னை சூப்பர் கிங்ஸ் & மும்பை இந்தியன்ஸ்) இடையேயான இந்த 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி நேற்று ஹைதராபாத்தில் பரபரப்புக்கும், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்தது.
கடைசி பந்து வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்த இந்த போட்டியில் ‘மும்பை இந்தியன்ஸ்’ அணி 1 ரன் வித்தியாசத்தில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணியை தோற்கடித்து 4-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது.
இந்த இறுதிப் போட்டியில் இரு அணிகளும் அதிகமாக தவறு செய்தனர். இருப்பினும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி செய்த ஒரு மிகப்பெரிய தவறு இந்த சீசனுக்கான ஐபிஎல் கோப்பையை அவர்கள் இழக்க காரணம் ஆகி விட்டது. அதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் காண்போம்.
சென்னை அணி நேற்றைய போட்டியில் அதிக தவறுகளை செய்தது. இருப்பினும் அதில் மிகப்பெரிய தவறு ‘ஹர்திக் பாண்டியா’வின் கேட்ச் வாய்ப்பை ‘சுரேஷ் ரெய்னா’ கோட்டை விட்டது தான். நேற்றைய ஆட்டத்தில் ‘ஷாதிரூல் தாகூர்’ வீசிய ஆட்டத்தின் 18-வது ஓவரில் மும்பை அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ‘ஹர்திக் பாண்டியா’ கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ‘சுரேஷ் ரெய்னா’ கோட்டை விட்டார்.
வழக்கமாக ‘சுரேஷ் ரெய்னா’ மிகச்சிறந்த ஒரு பீல்டர் தான். ஆனால் நேற்றைய போட்டியில் மிக முக்கியமான தருணத்தில் மும்பை அணியின் மிக முக்கியமான ஒரு வீரரின் கேட்ச்சை தவற விட்டது சென்னை அணிக்கு மிகப்பெரிய ஒரு பின்னடைவாக அமைந்தது. அதன் பின்னர் ஹர்திக் பாண்டியா அடுத்த 4 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 11 ரன்களை திரட்டினார்.
இந்த போட்டியில் ‘ஹர்திக் பாண்டியா’ மிகப்பெரிய பாதிப்பை சென்னைக்கு ஏற்படுத்தவில்லை. இருப்பினும் அவரது கேட்ச்சை தவற விட்டதற்கு பிறகு அவர் உடனடியாக 11 ரன்கள் சேர்த்தது மும்பை அணிக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய ஒரு ஊக்கமாக அமைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தது என்பது இங்கு கவனிக்கப்படவேண்டிய ஒரு விஷயமாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முக்கியமான இறுதிப்போட்டியில் மேலும் சில தவறுகளை செய்தது. குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ‘இம்ரான் தாஹீர்’ அவரது முழுமையான 4 ஓவர்களை நேற்று வீசவில்லை. மாறாக 3 ஓவர்கள் மட்டுமே நேற்று அவர் பந்து வீசினார்.
மேலும் போட்டியின் முக்கியமான கட்டத்தில் கேப்டன் ‘தோனி’ மற்றும் ‘ஷேன் வாட்சன்’ ஆகியோரின் ‘ரன் அவுட்’கள் ஆட்டத்தின் முக்கிய திருப்பமாக அமைந்தன. குறிப்பாக தோனியின் அந்த சர்ச்சைக்குரிய ரன் அவுட் இன்னும் பல காலத்திற்கு சென்னை ரசிகர்களால் பேசப்படும்.
நேற்றைய போட்டி முடிந்ததற்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ‘தோனி’ குறிப்பாக சொன்ன வார்த்தைகள் இவை தான்,
“இந்த போட்டியில் இரு அணிகளுமே தவறுகள் செய்தோம். அதில் குறைவான தவறு செய்த அணிக்கு கோப்பை கிடைத்திருக்கிறது”.
எது எப்படி இருந்தாலும் இந்த வெற்றிக்கு ‘ரோகித் சர்மா’ தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் தகுதியானதே.