‘விராட் கோலி’ தலைமையிலான ‘ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்’ (RCB) அணிக்கு இந்த ஐபிஎல் தொடர் அவ்வளவு சிறப்பானதாக அமைய வில்லை. மொத்தம் விளையாடியுள்ள 9 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது RCB அணி.
இந்நிலையில் எஞ்சியுள்ள 5 போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறுவதற்கான ஒரு சிறிய வாய்ப்பு தென்படும். ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற RCB அணி அதே உத்வேகத்தை சென்னைக்கு எதிராக இன்று பெங்களூரில் நடைபெறும் போட்டியிலும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் எதிர்த்து விளையாடும் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி இந்த ஐபிஎல் தொடரில் சூப்பர் ஃபார்மில் இருக்கிறது. விளையாடிய 9 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது CSK அணி. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை ஏறக்குறைய உறுதிப்படுத்தி விடலாம் என்ற நிலையில் RCB அணியை எதிர்த்து இன்று களம் இறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
எனவே இன்றைய போட்டியில் RCB அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஏற்றார்ப் போல வலுவான ஒரு அணியாக இன்று களமிறங்க வேண்டும். ஆகவே RCB அணி இன்றைய போட்டியில் ஒரு அதிரடி மாற்றத்தை ஆடும் லெவனில் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.
RCB அணியில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ஆல்-ரவுண்டர் ‘பவான் நெகி’ சென்னைக்கு எதிரான இன்றைய போட்டியில் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மற்றொரு ஆல்-ரவுண்டர் ‘வாஷிங்டன் சுந்தர்’ அணியில் சேர்க்கப்பட்ட அதிக வாய்ப்புள்ளது.
‘பவான் நெகி’ இந்த ஐபிஎல் தொடரில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் நெகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்றபடி அவரது பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. மேலும் பேட்டிங் வாய்ப்பு கிடைத்த இரண்டு போட்டிகளிலும் ‘டக்’ அவுட்டாகி சொதப்பினார்.
எனவே ‘நெகி’க்கு பதிலாக ‘வாஷிங்டன் சுந்தர்’ இன்றைய போட்டியில் களமிறங்க மிக அதிக வாய்ப்புகள் உள்ளது. வலது கை ஆஃப் பிரேக் பவுலரான இவர் பவர் பிளே ஓவர்களிலும் தனது சிறப்பான பந்துவீச்சால் ரன்களை கட்டுப்படுத்தும் திறமை வாய்ந்தவர். மேலும் சிறப்பான இடது கை பேட்ஸ்மேனான இவர் குறைந்த பந்துகளில் அதிக ரன்களை விளாசும் திறமை வாய்ந்தவர். இவரது பேட்டிங் ‘ஸ்ட்ரைக் ரேட்’ 175 என்பது குறிப்பிடத்தக்கது.
19 வயது மட்டுமே ஆன இளம் வீரரான ‘வாஷிங்டன் சுந்தர்’ இந்த ஐபிஎல் தொடரில் எந்த ஒரு போட்டியிலும் களமிறக்கப்படவில்லை. இன்றைய சென்னைக்கு எதிரான போட்டியில் இவர் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டால் அது RCB அணிக்கு மிகப் பெரிய பலமாக அமையும்.
ஏதேனும் பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே ‘ப்ளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் உள்ள RCB அணி இன்றைய போட்டியில் இந்த மாற்றத்தை மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.