டெஸ்ட் கிரிக்கெட் மூலம் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் அடையாளம் காணப்படுகிறார். பேட்ஸ்மேனின் நிதானநிலை, பௌலரின் சீரான ஆட்டத்திறன் மற்றும் வெவ்வேறு கோணங்களில் பந்துவீசும் திறன் ஆகியன டெஸ்ட் கிரிக்கெட் மூலம் மட்டுமே சோதனை செய்து பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு வீரர் தொடர்ந்து 5 நாட்கள் விளையாட அவரது உடல்நிலை நன்கு ஒத்துழைக்கிறதா என்பதை கண்டறியவும் டெஸ்ட் கிரிக்கெட் உதவுகிறது.
பெரும்பாலும் கிரிக்கெட்டில் 4 அல்லது 5 பௌலர்கள் வழக்கமான மெய்ன் வீரர்களாக இடம்பெறுவார்கள். இவர்கள் சொதப்பும் போது சில பகுதிநேர பௌலர்கள் பந்துவீச அழைக்கப்படுவார்கள். ஆனால் 4 முறை டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்துள்ளனர்.
இந்நிகழ்வு முதல்முறையாக 1984ல் ஆஸ்திரேலியா இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது மூன்றாவது டெஸ்டில் நிகழ்ந்தது. அடுத்ததாக 1980ல் ஃபேய்ஸ்லாமபாத்-தில் நடந்த பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்தது. மூன்றாவது நிகழ்வு 2002ல் இந்தியா மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபபோது நடந்தது. கடைசியாக 2005ல் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் 11 வீரர்களும் பௌலிங் செய்துள்ளனர்.
நாம் இங்கு 2002ல் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா அணிகள் மோதிய போட்டியில் நடந்ததைப் பற்றி காண்போம்.
டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் ஃபீல்டிங்-ஐ தேர்வு செய்தது. இந்திய அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. சிவ் சுந்தர் தாஸ் 3 ரன்களில் வெளியேறினார். வாஸீம் ஜாஃபர் (87) ராகுல் டிராவிட்-வுடன் சேர்ந்து 144 ரன்கள் பார்ட்னர் ஷீப் செய்து விளையாடினார். இப்போட்டியில் சச்சின் டெண்டுல்கர் கோல்டன் டக் ஆனார். பின்னர் ராகுல் டிராவிட் மற்றும் சவ்ரவ் கங்குலி இணைந்து அந்த நாளில் அதற்கு மேல் விக்கெட்டை விட்டு தராமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.
இரண்டாவது நாளின் ஆரம்பத்திலேயே சவ்ரவ் கங்குலி (45), ராகுல் டிராவிட் (91) மற்றும் அணில் கும்ளே (6) ஆகியோர் வீழ்த்தப்பட்டனர். ஆனால் விக்கெட் கீப்பர் அஜய் ரத்ரா மற்றும் VVS லக்ஷமன் ஆகிய இருவரும் இணைந்து 8வது விக்கெட்டிற்கு 205 ரன்கள் குவித்ததன் மூலம் 2வது நாள் ஆட்டம் இந்தியா பக்கம் சாதகமாக இருந்தது.
அடுத்த நாள் ஆரம்பத்தில் VVS லக்ஷமன்(130) ஆரம்பத்திலேயே வீழ்த்தப்பட்டார். விக்கெட் அஜய் ரத்ரா நிதானமாக விளையாடி சதத்தை நிறைவு செய்தார். மேலும் கடைநிலை பேட்ஸ்மேன்களுடன் இனைந்து 40 ரன்கள் சேர்த்தார். இந்தியா 9 விக்கெட்டுகளுக்கு 513 ரன்கள் எடுத்திருந்தபோது கங்குலி டிக்ளர் செய்தார்.
கிறிஸ் கெய்ல் மற்றும் வேவெல் ஹிண்ட்ஸ் ஆகியோர் இந்த ஆடுகளம் பௌலர்களுக்கு சாதகமானதல்ல என்பதை நன்கு அறிந்தவர்கள். எனவே மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரண்டரை நாட்கள் இந்தியா பேட்டிங் செய்ததை கண்ட மேற்கிந்தியத் தீவுகள் தானும் அவ்வாறு செயல்பட முயன்றனர். ஜாஹீர் கான் விக்கெட் கணக்கை கிறிஸ் கெய்ல் (32) மூலம் தொடங்கி வைத்தார். ராம்நரேஷ் சர்வான் மற்றும் வேவெல் ஹிண்ட்ஸ் ஆகியோரின் பார்ட்னர்ஷீப் இந்திய அணியை பாதிக்கும் என எதிர்பார்த்தபோது சச்சின் டெண்டுல்கர் தனது சுழலில், நன்றாக நிலைத்து விளையாடிக் கொண்டிருந்த வேவெல் ஹிண்ட்ஸ்-ஐ 65 ரன்கள் எடுத்திருந்தபோது பெவிலியன் அனுப்பினார். அதன்பின் களம் கண்ட பிரைன் லாரா-வை அணில் கும்ளே 4 ரன்களில் வீழ்த்தினார். ஆனால் கார்ல் ஹேப்பர் மற்றும் ராம்நரேஷ் சர்வான் இருவரும் சேர்ந்து அந்நாளில் அதற்கு மேல் விக்கெட் விட்டுக்கொடுக்காமல் பார்த்துக் கொண்டனர்.