நேற்று முன் தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கடும் மழை பெய்து குறுக்கிட்டது. இதனால், இரு அணிகளுக்கும் தலா 5 ஓவர்கள் என்ற வீதம் ஆட்டம் நடைபெற்றது. பின்னர், மழையின் கோர தாண்டவத்தால் போட்டி முடிவு இல்லாமல் போனது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து இருந்த பெங்களூர் அணியின் கனவு அந்த மழையோடு முடிவுக்கு வந்தது. இதன் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முதல் அணியாக அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கும் விராட் கோலியின் முகத்தில் இந்த மாறுபட்ட முடிவினால் சற்று புன்னகை பூத்தது. பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் இருந்தாலும் விராட் கோலியின் இந்த சிரிப்பிற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, மேலும் ஒரு தோல்வியை இந்த அணி தழுவுவதை மழை வந்து தடுத்தது. மற்றொன்று, ஐபிஎல் பற்றி நீண்ட காலமாக இவர் கவலைப்படத் தேவையில்லை. இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை தொடரில் முழு கவனத்தை செலுத்த இந்த ஓய்வு விராட் கோலிக்கு மிகவும் தேவையான ஒன்றாகும். எனவே, ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் நினைப்பது என்னவென்றால், பெங்களூர் அணியின் தொடர்ச்சியான தோல்விகளும் இதனால் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் போனதும் விராத் கோலிக்கு நீண்டகால ஓய்வினை அளிக்கும். ஒரு வேளை இந்த தொடரில் விளையாடி அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், அது உலக கோப்பை தொடரில் பிரதிபலிக்கும்.
உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், அணியின் கேப்டன் விராத் கோலிக்கு புத்துணர்ச்சியும் உலக கோப்பை தொடரில் நன்கு விளையாடுவதற்கு சற்று தயார் ஆவதற்கும் இந்த ஓய்வு மிகவும் அவசியமாகும். கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இவர் அடித்த சதமானது இவரின் பேட்டிங் ஃபார்மை மீண்டும் ஒருமுறை எடுத்துரைக்கிறது. இதனால், விராத் கோலியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் சற்று நம்பிக்கையில் உள்ளனர். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் உலக கோப்பை தொடரில் இடம் பெற்ற இந்திய அணி வீரர்களில் எந்த ஒரு வீரருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்திருந்தால், இந்திய கிரிக்கெட் அணியை நிர்வாகத்திற்கு சற்று நெருக்கடி ஏற்பட்டிருக்கும். இது மட்டுமல்லாமல், உலகக் கோப்பை தொடரிலும் சற்று பாதிப்பை உண்டாக்கியிருக்கும்.