டெஸ்ட் தொடரை வெல்ல, மற்ற பேட்ஸ்மேன்கள் கோலிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் - ஆடம் கில்கிறிஸ்ட்

ஆடம் கில்கிறிஸ்ட்
ஆடம் கில்கிறிஸ்ட்

ஆஸ்திரேலிய ஜாம்பவானான ஆடம் கில்கிறிஸ்ட் வரப்போகும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், அணியின் கேப்டனான கோலிக்கு மற்ற பேட்ஸ்மேன்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்படி அமைந்தால் தான் இந்தியா தொடரை வெல்ல முடியும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் டிசம்பர் 6-ஆம் தேதி தொடங்க உள்ளது, கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் கோலி ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்ததைப் பற்றி நினைவுகூர்ந்துள்ளார் கில்கிறிஸ்ட்.

அவர் கூறியதாவது “எதிர்கொள்ளப்போகும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி, 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் எப்படி ஆக்ரோஷத்துடன் இருந்தாரோ(694 ரன்கள் 4 டெஸ்ட் போட்டிகளில்,சராசரி 86.50), அதே ஆக்ரோஷத்துடன் இத்தொடரிலும் தனது சிறந்த பங்கினை ஆற்றுவார், சில தினங்களுக்கு முன்பு அவரை சந்தித்தேன். அவரது கண்களில் ரன் பசி தெரிகிறது, மேலும் தன்னம்பிக்கையுடன் உள்ளார் என்பது நன்றாக தெரிகிறது,எனவே அவர் நன்றாக ஆடுவார் என்பதில் சந்தேகமில்லை” என தெரிவித்தார்.

“இந்த தொடரில் இந்தியா வெற்றி பெறுவதற்கு விராட் கோலியை சுற்றியுள்ள பேட்ஸ்மேன்கள் பெரும்பங்கு ஆற்ற வேண்டும், அவ்வாறு செய்தால் இந்தியா ரன்களை குவித்து, பின்பு கொண்டுள்ள சிறந்த பவுலிங் அட்டாக்கினால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியும்” எனவும் கூறியுள்ளார்

விராட் கோலியை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா பவுலர்கள் யுக்திகளை கையாள்வார்களா என்ற கேள்விக்கு, அவர் கூறியதாவது "கோலியை அவுட்டாக்கும் பிரத்தியேக திட்டம் என்பது எதுவுமில்லை, என்னால் கூறவும் இயலாது. அவர் ஒரு தலைச்சிறந்த பேட்ஸ்மேன். அவரை அவுட் ஆக்குவது கடினம். ஆஸ்திரேலிய பவுலர்கள் பொறுமையுடன் தான் அவரை வெல்ல வேண்டும். பழைய டெஸ்ட் கிரிக்கெட் நெறிகளை அவர்கள் (ஆஸ்திரேலிய பவுலர்கள்) கையாளவேண்டும்” எனக் கூறினார்

“விராட் கோலி மட்டுமில்லாது, மற்ற பேட்ஸ்மேன்களையும் அவுட் ஆக்க ஆஸ்திரேலியா பவுலர்கள் திட்டமிடுதல் வேண்டும்.குறிப்பாக ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு புதிதாக வந்தேறினால் அவரை அவுட்டாக்கும் திட்டம் சிறப்பாக அமைந்திட வேண்டும்” என ஆஸ்திரேலியா பவுலர்கள் என்ன செய்யவேண்டும் என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் கில்கிரிஸ்ட்.

இந்தத் தொடரை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக ஒப்புக்கொண்ட கில்கிரிஸ்ட், ஆஸ்திரேலிய அணியை சொந்த களத்தில் குறைத்து மதிப்பிட முடியாது என நடுநிலையுடன் கருத்து தெரிவித்திருக்கிறார் அவர் கூறியதாவது “இந்திய டெஸ்ட் அணி நிலையாக உள்ளது, ஓரிரு ஸ்பாட் தான் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. அதை சீர்திருத்திக் கொண்டால் இந்தியா வலுவான அணியாக உருப்பெறும். ஆஸ்திரேலிய அணியை எடுத்துக்கொண்டால், தேர்வாளர்கள் அணியின் சமநிலை குறித்து உறுதியாக இல்லை. ஆஸ்திரேலியா கிரிக்கெட் புதிய பரிமாணத்தில் பயணிக்கிறது” என கூறியிருக்கிறார்

“தொடரை வெல்ல இரு அணிகளுக்கும் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா பல சறுக்கல்களை சந்தித்திருந்தாலும் சொந்த மண்ணில் வலிமை பெறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை” என ஆஸ்திரேலியாவிற்கு ஆதரவாக கில்கிரிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

பவுலிங்கில் எடுத்துக்கொண்டால் இரு அணிகளும் சமமாக உள்ளதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். எந்த அணி எதிர் அணியின் பேட்டிங் வரிசையை சீர்குலைக்கிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகும் எனவும் கூறினார்.

Quick Links

App download animated image Get the free App now