உலகின் மிகச்சிறந்த டி20 தொடராக திகழ்ந்து வருகின்ற ஐபிஎல் தொடரானது, இந்திய இளம் வீரர்களுக்கு ஓர் சிறந்த மேடையாக உருவெடுத்து வந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதன் மூலமாக இந்திய அணியில் தங்களுக்கான இடத்தை பிடித்து கொண்டு வருகின்றனர் இளம் வீரர்கள்.
ஹார்டிக் பாண்டியா, ஜஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ், சஹால் போன்றோர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியே இந்திய அணியில் நீங்கா இடம் பெற்றனர்.
இந்தியர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை தன்வசம் ஈர்த்தனர். டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில், லசித் மலிங்கா போன்றோர் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு உலக அளவில் புகழ் பெற்றனர். மேலும் சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களது அணியில் நீங்கா இடம் பெற்று வந்தனர். மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், கிறிஸ் மோரிஸ் போன்றோர் இதற்கு எடுத்துக்காட்டு.
இருப்பினும், சில வெளிநாட்டு வீரர்கள் சிறப்பான முறையில் செயல்படாமல் போன காரணத்தால் குறைந்த வாய்ப்புகள் மட்டுமே பெற்றனர். நாம் நினைவில் வைத்து கொள்ள தவறிய எட்டு வெளிநாட்டு வீரர்களை பற்றி விரிவாக இங்கு காண்போம்.
#1. மைக்கேல் கிளிங்கர் (கொச்சி டஸ்கர்ஸ் கேரளா)
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த கிளிங்கருக்கு 2011-ல் கொச்சி அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
அப்போது 30 வயதான கிளிங்கரை கொச்சி அணி $75,000-க்கு ஏலத்தில் எடுத்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியில் முதன்முறை களமிறங்கினார் கிளிங்கர். அப்போட்டியில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டாம் ஓவரில் தனது விக்கெட்டை இழந்தார்.
2011 ஆம் சீசனில் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடி மொத்தம் 73 ரன்களை குவித்தார். சராசரி 18.25 மேலும் ஸ்ட்ரைக் ரேட் 94.81. அதிகபட்ச ஸ்கோராக 29 ரன்கள் குவித்தார். அதன் பிறகு சில வர்த்தக ரீதியான காரணத்தினால் கொச்சி அணியும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகிக்கொண்டது.
#2. ஆட்ரியன் பரத் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், 2010)
தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் பெற்ற டிரினிடாட் மற்றும் டொபாகோ அணியின் முதல்வரிசை பேட்ஸ்மனான பரத், பஞ்சாப் அணியால் 2010-ஆம் ஆண்டு $75,000-க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
19 வயதான பரத்திற்கு பெரிதான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. அந்த ஒரு சீசனில் மட்டுமே விளையாடிய பரத் மொத்தம் மூன்று போட்டிகளில் களமிறங்கி 42 ரன்கள் குவித்தார், சராசரி 21, ஸ்டரைக் ரேட் 100 மற்றும் அதிகபட்ச ஸ்கோராக 33 குவித்தார்.
#3. டைரோன் ஹென்டர்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ், 2009)
உள்ளூர் டி20 போட்டிகளில் தனது ஆல்-ரவுண்ட் திறமையால் புகழ் பெற்ற ஹென்டர்சன் தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கி வந்ததால், ராஜஸ்தான் அணி $650,000 என்ற பெருந்தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது. வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற டைரோன் ஹென்டர்சனால் அவரது நாட்டில் ஜொலித்தது போல் இந்தியாவில் ஜொலிக்க முடியவில்லை.
அவர் விளையாடிய இரண்டு போட்டிகளில் வெறும் 11 ரன்களை குவித்து, சராசரி 5.5, ஸ்டரைக் ரேட் 68.75. பௌலிங்கில் ஆறு ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் மற்றும் ஏகாணமி 6.67 என்ற சுமாரான ஆடத்தையே வெளிப்படுத்தினார்.
#4. கிரஹாம் நேப்பியர் (மும்பை இந்தியன்ஸ், 2009)
இங்கிலாந்தின் எசெக்ஸ் அணிக்காக விளையாடிய நேப்பியர் ஒருபோட்டியில் 58 பந்துகளில் 152 ரன்கள் 16 சிக்ஸர்கள் குவித்து செய்தித்தாள்களின் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றார். மும்பை அணி இவரை 2009-ல் தனது அணியில் சேர்த்தது. நடுத்தர வேகத்தில் பந்து வீசும் ஆல்-ரவுண்டரான நேப்பியர் மும்பை அணிக்காக ஒரேவொரு போட்டியில் மட்டுமே கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். பேட்டிங்கில் 16 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே குவித்தார். பௌலிங்கில் நான்கு ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார்.
#5. தில்லோன் டூ ப்ரீஸ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், 2009)
தென் ஆப்பிரிக்காவை சார்ந்த தில்லோன் டூ ப்ரீஸ் பெங்களூர் அணியால் 2009-ல் ஏலம் எடுக்கப்பட்டார். பெங்களூர் அணியின் வேகப்பந்து வீச்சை வலுப்படுத்துவதற்காக அணியில் இணைக்கப்பட்ட டூ ப்ரீஸ் தான் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே மும்பையின் சச்சின் டெண்டுல்கர் விக்கெட்டை வீழ்த்தினார். அப்போட்டியில் மொத்தம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கு பிறகு ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் களமிறங்கினார். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய டூ ப்ரீஸ் மொத்தம் 7 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி எகானமி 8.00 யுடன் அந்த சீசனை முடித்துக்கொண்டர். தனது சிறப்பான பௌலிங்கை 3/32 மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார்.
#6. லீ கார்ல்டெல்டின் (ராஜஸ்தான் ராயல்ஸ், 2009)
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்டை சேர்ந்த பேட்ஸ்மேன் மற்றும் நடுத்தர வேகத்தில் பந்துவீசக் கூடிய லீ கார்ல்டெல்டினை அப்போதைய முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் அணி தனது அணியில் இருந்த பாகிஸ்தான் வீரருக்கு பதிலாக எடுத்தது.
தான் விளையாடிய முதல் ஐபிஎல் போட்டியில் டெக்கான் சார்ஜ்ர்ஸ் அணிக்கு எதிராக 39 ரன்கள் குவித்து அசத்தினார் லீ.
மொத்தம் 5 போட்டிகளில் விளையாடிய லீ, 81 ரன்கள் குவித்தார், சராசரி 20.25 மற்றும் ஸ்ட்ரிக் ரேட் 119.12 அதிகபட்ச ஸ்கோராக 39 ரன்கள். ஒரேவொரு ஓவர் பந்து வீசி அதில் ஒரு விக்கெட் வீழ்த்தியும் உள்ளார் லீ.
#7. மோர்னி வேன் விக் (கொல்கத்தா நயிட் ரைடர்ஸ், 2009)
தென் ஆப்பிரிக்காவை சார்ந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான வேன் விக்கை கொல்கத்தா அணி 2009-ம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் தனது அணியில் சேர்த்தது. அந்த ஆண்டில் ஐபிஎல் போட்டியானது தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது கொல்கத்தா அணிக்கு சாதகமாக அமைந்தது.
வேன் விக் தனது முதல் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிராக 43* ரன்கள் குவித்தார் எனினும் கொல்கத்தா அணி தோல்வியுற்றது. தொடரில் அதிகபட்சமாக 74* ரன்கள் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்தார் அதிலும் கொல்கத்தா அணி தோல்வியை தழுவியது.
ஐந்து போட்டிகளில் விளையாடி 167 ரன்கள், சராசரி 55.67 மற்றும் ஸ்டரைக் ரேட் 126.52 என தனது அணிக்கு பெரிதும் உதவினார். மற்றவர்கள் போல் இல்லாமல் வேன் விக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அவரால் ஐபிஎல் போட்டிகளில் தொடர முடியவில்லை.
#8. ஆஷ்லே நாப்கே (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,2008)
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் நாதன் பிராக்கென் காயம் காரணமாக வெளியேறியதால் ஆஷ்லே விளையாடினார்.
கொல்கத்தா மற்றும் பெங்களூர் இடையில் நடந்த ஐபிஎல்-இன் முதல் போட்டியில் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. கொல்கத்தா அணியின் பிரண்டன் மெக்கலம் பெங்களூர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து கொண்டிருந்தார்.
ஆஷ்லே தான் வீசிய நான்கு ஓவரில் 40 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதுவே அவரது கடைசி போட்டியாகவும் அமைந்தது.
எழுத்து: தீபக்
மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்