உலககோப்பை தொடரில் தற்போது ஆஸ்திரேலிய அணி மற்றும் தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தென்னாப்ரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலககோப்பையின் அரையிறுதி போட்டியில் நுழையும் வாய்ப்பினை தவறவிட்டது. இந்நிலையில் மற்ற ஏழு அணிகளும் மூன்று இடத்திற்காக போராடி வருகின்றனர். இதில் இன்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பினை இழந்து விடும். இந்த போட்டியானது இங்கிலாந்து நாட்டின் பிர்மின்ஹம் மைதானத்தில் நடைபெற்றது. மழையில் காரணமாக இந்த போட்டியானது துவங்குவது தாமதமானது. இருந்தாலும் ஓவர்கள் எதுவும் குறைக்கப்படவில்லை. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி நியூசிலாந்து அணி சார்பாக கப்தில் மற்றும் முன்ரோ துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டம் துவங்கிய இரண்டாவது ஓவரிலேயே 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கப்தில் அமீரின் பந்தில் போல்டு ஆனார். அதன் பின் அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் களமிறங்கினார். இவர் முன்ரோவுடன் சேர்ந்து நிதானமாக ஆடிவந்தார். இந்த ஜோடியும் நீடிக்கவில்லை. முன்ரோ 12 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஷாகீன் அப்ரிடி பந்தில் ஹாரிஸ் ஷோஹிலிடம் கேட்ச் ஆனார். அதன் பின் வந்த ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாதம் இருவரும் அப்ரிடி பந்துக்கு அடுத்தடுத்து இறையாகினர்.

46 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது நியூசிலாந்து. அப்போது களமிறங்கினார் ஜிம்மி நீஷம். இவர் அணியின் கேப்டன் வில்லியம்சனுடன் இணைந்து சிறப்பாக ஆடிவந்தார். இந்த ஜோடி அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தியது. அப்போது வில்லியம்சன் 41 ரன்களில் இருந்தபோது சதப் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கோலின் டி க்ரான்ட்ஹோம், நீஷம் உடன் இணைந்தார். இந்த இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இந்த ஜோடியினை பிரிக்க பாகிஸ்தான் பல்வேறு பந்து வீச்சாளர்களை பயன் படுத்தியும் அது பலனளிக்கவில்லை. சிறப்பாக ஆடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை கடத்தனர். இந்த ஜோடியானது 5 வது விககெட்டுக்கு 132 ரன்கள் குவித்தனர். க்ரான்ட்ஹோம் 64 ரன்களில் இருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நீசம் 97 ரன்கள் குவித்து அசத்தினார். இறுதியில் இவரது அதிரடியால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 237 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக நீஷம் 97 ரன்கள் மற்றும் க்ரான்ட்ஹோம் 64 ரன்களும் குவித்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் ஷாகீன் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளும், அமீர் மற்றும் சதப்கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் 238 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆந்த அணி சார்பாக இமாம் உல் அக் மற்றும் பஃகர் ஜமான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். இவர்களுக்கும் துவக்கம் சிறப்பாக அமையவில்லை. பஃகர் ஜமான் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து போல்ட் பந்தில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் பாபர் அஸாம் களமிறங்கினார். இவர் இமாம் உல் அக் உடன் இணைந்து ஆடி வர இந்த ஜோடியும் 44 ரன்களில் இருக்கும் போது இமாம் உல் அக் பெர்குசன் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார்.

அதனைத் தொடர்ந்து ஹபீஸ் மற்றும் பாபர் அஸாம் இணைந்தனர். பாபர் அஸாம் வழக்கம் போல நிதானமாக ஆடி ரன்களை குவித்து வந்தார். அவருடன் இணைந்து ஹபீஸும் சிறப்பாக ஆடிவந்தார். சிறப்பாக ஆடிவந்த பாபர் அஸாம் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்நிலையில் ஹபீஸ் 32 ரன்களில் வில்லியம்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் தான் ஆட்டம் சூடுபிடித்தது. ஹாரிஸ் ஷோயில் மற்றும் பாபர் அஸாம் ஜோடி இலக்கை விரைவாக துரத்தினர். இதில் சிறப்பாக ஆடிய ஹாரிஸ் ஷோயில் அரைசதமும் பாபர் அஸாம் சதமும் அடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தனர். நியூசிலாந்து அணி சார்பில் பெர்குசன் 2 விக்கெட்டுகளையும், போல்ட், வில்லியம்சன் தலா ஓரு விக்கெட்டையும் வீழ்த்தினர். சிறப்பாக ஆடி சதமடித்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற வைத்த பாபர் அஸாம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட 1992 உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் நிலையை சமன் செயாதுள்ளது. 1992 உலககோப்பை தொடரிலும் லீக் தொடரில் பாகிஸ்தான் அணி தனது ஏழாவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.