பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. உலககோப்பை தொடர் நெருங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து மண்ணில் பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் பங்கேற்பதால் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. முதல் போட்டி மழை காரணமாக தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இது அவர் கேப்டனாக பங்கேற்கும் 100வது ஒருநாள் போட்டி.
இதன்படி இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான பேர்ஸ்டோ மற்றும் வின்ஸ் களமிறங்கினர். இருவரும் அதிரடியான துவக்கத்தை தந்தனர். ஆனால் அது நீடிக்கவில்லை. வின்ஸ் 33 ரன்களில் இருந்தபோது ஷாகின் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து பேர்ஸ்டோ 31 ரன்களில் இருந்தபோது இமாட் வாசிம் பந்திலும் ஆட்டமிழந்தார். அடாத்து ஜோ ரூட் மற்றும் இயான் மோர்கன் இணைந்தனர். இருவரும் இங்கிலாந்து அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 117 ரன்கள் குவித்தனர். சிறப்பாக ஆடிய மோர்கன் 71 ரன்களில் இருந்தபோது ஷாகின் அப்பிடி பந்திலும் ஜோ ரூட் 84 ரன்களில் முகமது ஹஸ்னேன் பந்திலும் தங்களது விக்கெட்டுகளையும் இழந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் 34 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாகின் அப்ரிடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இமாம் உல் அக் காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்காததால் அவருக்கு பதிலாக அபிட் அலி, ப ஃகர் ஜமானுடன் துவக்க வீரராக களமிறங்கினார். பாகிஸ்தான் அணிக்கு துவக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் மூன்றாவது பந்திலே பஃகர் ஜமான் ரன் எதுவும் எடுக்காமல் க்ரிஷ் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து மூன்றாவது ஓவரிலேயே அபிட் அலி 5 ரன்களிலும், ஹபீஸ் ரன் எதுவும் எடுக்காமலும் வோக்ஸ் பந்துவீச்சிற்கு இரையாகினர்.
பின்னர் பாபர் அஸாம் மற்றும் கேப்டன் சப்ராஸ் ஜோடி சேரந்தனர். இருவரும் நிலைத்து ஆடி இலக்கை துரத்தினர். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதத்தை கடந்தனர். இவர்களின் விக்கெட்டை வீழ்த்த இங்கிலாந்து அணி மிகவும் தணறியது. இறுதியில் பாபர் அஸாம் 80 ரன்களில் இருந்தபோது ரன் அவுட் ஆனார். அதேபோல் சப்ராஸ் அகமது 97 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதன் பின் ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. அடுத்து வந்த ஆட்டக்காரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.